அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு | Case against Minister Senthil Balaji: Police ordered to respond

1352432.jpg
Spread the love

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் குற்றப்பத்திரிகைகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்டுள்ள வழக்கில் போலீஸார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2011 முதல் 2015 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவர் மீது 3 குற்ற வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி – எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த 3 வழக்குகளிலும் போலீஸார் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2,222 பேர் மீது குற்றம்சாட்டி கூடுதல் குற்றப்பத்திரிகைகளை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தனித்தனியாக குற்றப்பத்திரிகைகளை போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். இவற்றை ஒன்றாக சேர்த்து விசாரித்தால் விசாரணை முடிவதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடும். எனவே செந்தில் பாலாஜிக்கு எதிரான 3 வழக்குகளையும் தனித்தனியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்,” என வாதிடப்பட்டது.

இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, மனு தொடர்பாக போலீஸார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *