அமைச்சர் பதவி விலகக் கோரி காங், திமுக தர்ணா: புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் வெளியேற்றம் | Ruckus in Pudhuchery Assembly: Opposition leader evicted

1355476.jpg
Spread the love

புதுச்சேரி: பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சிபிஐயால் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவி விலகக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அதையடுத்து எதிர்கட்சி தலைவர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார்.

லஞ்சம் பெற்ற வழக்கில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த விவகாரம் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று (மார்ச்.24) எதிரொலித்தது.

கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுக்கப்பட்டது.அப்போது எதிர்க்கட்சித் தலைவர் திமுக எம்எல்ஏ சிவா எழுந்து சிபிஐயால் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் கைது என்பது புதுச்சேரிக்கு மிகப் பெரிய தலைகுனிவு. கேள்வி நேரத்தை ஒத்திவைத்து அவசர பிரச்சினையாக இதனை எடுத்துப் பேச வேண்டும் என்றார்.

அவ்வாறு சட்டத்தில் இடமில்லை. கேள்வி நேரத்துக்கு பிறகு இது பற்றி முதல்வர் அல்லது பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளிப்பார்கள் என சபாநாயகர் செல்வம் குறிபிட்டார். அதையடுத்து திமுக, காங் எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் நின்று கோஷமிட்டதுடன் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.

இதனால் அனைவரையும் குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட சபைக் காவலர்கள் எதிர்க்கட்சி தலைவர் சிவாவை குண்டுக்கட்டாக வெளியே தூக்கி வந்தனர். தொடர்ந்து காங், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

இதனிடையே சட்டப்பேரவைக்கு தாமதமாக வந்த காரைக்கால் திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், நாக தியாகராஜன் ஆகியோர் அவைக்கு வந்து வெளியேற்றியவர்களை மீண்டும் அவைக்குள் அழையுங்கள். அவர்கள் முக்கியப் பிரச்சினையை தான் பேசியுள்ளார் என்றனர்.

இதற்கு சபாநாயகர் செல்வம், “இது சிபிஐ விவகாரம்.மத்திய அரசு பதில் கூறும். சட்டமன்றம் அதற்குப் பதிலளிக்கும் இடமில்லை.” எனக் கூறினார். மேலும் அமைச்சர் பதவி விலக கூற வேண்டிய அவசியமில்லை என ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கோஷமிட அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

அப்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குறுக்கிட்டு, ‘கேள்வி நேரத்துக்கு பிறகு விவாதிக்கலாம் என கூறினார் . தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தாரா? சபாநாயகர் கூறிய பிறகு அவைக்கு நடுவில் நாடகம் தேவையில்லை” எனக் கூறினார் . அதையடுத்து தாமதமாக வந்த 2 திமுக எம்எல்ஏக்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *