“அமைச்சர் பிடிஆர் குறிப்பிட்ட ‘ரூ.30,000 கோடி குற்றச்சாட்டு’ விசாரிக்கப்படும்” – மதுரையில் இபிஎஸ் உறுதி | allegation mentioned by Minister ptr will be investigated in aiadmk rule EPS

1375292
Spread the love

மதுரை: “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன் தெரிவித்த ரூ.30 ஆயிரம் கோடி குற்றச்சாட்டு குறித்து அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட டிஎம் கோர்ட், மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஓபுளாபடித்துறை பகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று இரவு: “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன்பு முதல்வரின் மருமகன் சபரீசனும், துணை முதல்வர் உதயநிதியும் ரூ.30 ஆயிரம் கோடி சேர்த்துள்ளனர். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாக கூறினார்.

இது குறித்து இப்போது வரை முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடி சேர்த்திருப்பதாக அமைச்சர் ஒருவரே கூறியுள்ளார். இதில் உண்மையில்லாமல் இருக்காது. இது குறித்து அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்படும். முறைகேடாக பணம் சேர்த்தது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற டிஜிபி சங்கர் ஜிவால், ‘ஓ’ போட்டுக் கொண்டே ஓய்வுபெற்றுச் சென்றுவிட்டார். தமிழகத்தில் காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்தான் உள்ளது. 6 மாதங்களில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசு செயலற்ற அரசாக உள்ளது.

அதிமுக சாதி, மதத்துக்கு அப்பாற்றப்பட்ட கட்சி. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. சாதி, மதச் சண்டை இல்லாமல் பார்த்துக் கொண்டோம். இருப்பினும் அதிமுக – பாஜக கூட்டணி சிறுபான்மை மக்களுக்கு எதிரானது என்ற தோற்றத்தை வேண்டும் என்றே திட்டமிட்டுப் பரப்புகின்றனர். உண்மையில் சிறுபான்மையினருக்கு முழுமையாக பாதுகாப்பு கொடுப்பது அதிமுகதான். இதனால் திமுகவின் அவப்பிரச்சாரத்தை சிறுபான்மை மக்கள் நம்பக்கூடாது.

சமூக நீதியைப் பாதுகாப்பதாக திமுக கூறுகிறது. திண்டிவனத்தில் பட்டியலின அதிகாரியை திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளனர். பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் அரசாக திமுக அரசு உள்ளது. இவர்களா சமூக நீதியைப் பாதுகாக்க போகிறார்கள்” என்று அவர் பேசினார்.

கூட்டத்துக்கு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் கே.ராஜூ தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைப்புச் செயலாளர் ராஜன்செல்லப்பா, தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் ராஜ்சத்யன், மருத்துவர் அணி இணைச் செயலாளர் பா.சரவணன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு” – மதுரை டி.எம்.கோர்ட் பகுதியில் பழனிசாமி பேசும்போது, “மதுரையில் விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் கொடி கம்பம் அமைக்க அனுமதி வழங்குவதில்லை. இதை சொன்னால் திமுக கூட்டணியை உடைக்க பார்ப்பதாக விடுதலை சிறுத்தை கட்சியினர் சொல்வார்கள். திமுகதான் விடுதலை சிறுத்தை கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வருகிறது.

மதுரை எம்பி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி ஊழல் குறித்து இதுவரை மதுரை எம்பி வாய் திறக்கவில்லை. வாய் திறந்தால் அடுத்த ஆண்டு தேர்தலில் கூட்டணியில் இருந்து வெளியேற்றி விடுவார்கள். இவர் எம்பியாக இருக்க தகுதியானவரா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். திட்டங்களுக்கு பெயர் வைப்பதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அளிக்கப்பட்ட மனு ஆற்றில் வீசப்பட்டுள்ளது. மனு கொடுக்க வந்த முதியவரை கிராம நிர்வாக அதிகாரி தாக்கியுள்ளார். இதனால் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” என்று அவர் பேசினார்.

– கி.மகாராஜன், என்.சன்னாசி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *