அமைச்சர் பொன்முடி, மகன்கள் மார்ச் 19-ம் தேதி ஆஜராக சம்மன்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு | Minister Ponmudi, sons summoned to appear on March 19

1353233.jpg
Spread the love

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்டோர் மார்ச் 19-ம் தேதி ஆஜராக சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-11 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளங்கள் துறை அமைச்சராக, தற்போதைய அமைச்சர் பொன்முடி பதவி வகித்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலமாக அரசுக்கு ரூ.28.36 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், அமைச்சர் பொன்முடி, அவரது 2 மகன்களான திமுக எம்.பி. கவுதம சிகாமணி, கே.எம்.ஸ்பெஷலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் அசோக் சிகாமணி மற்றும் ராஜ மகேந்திரன், வி.ஜெயச்சந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ்.பிசினஸ் ஹவுஸ், கே.எஸ்.மினரல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, ரூ. 13 லட்சம் மதிப்பிலான பிரிட்டன் பவுண்டுகள் உட்பட ரூ. 81.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.41.90 கோடி வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கி வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன் விசாரித்து, அமலாக்கத் துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்டோர் வரும் மார்ச் 19-ம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் பிறப்பித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *