`அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல் நடத்தியது கீழ்த்தர அரசியல்' – காங்கிரஸுக்கு பினராயி கண்டனம்

Spread the love

கேரள மாநிலம் ஆலப்புழாவில் அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் இருந்தது 5 ஆண்டுகளுக்குப்பின் தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று கண்ணூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் திருவனந்தபுரம் செல்வதற்காக கண்ணூர் ரயில் நிலையம் சென்றார். அங்கு அமைச்சர் வீணா ஜார்ஜிக்கு எதிராக காங்கிரஸ் மாணவர் அமைப்பான கே.எஸ்.யு -வைச் சேர்ந்தவர்கள் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

அமைச்சரை நடை மேடையில் நடந்துசெல்ல விடாமல் போராட்டக்காரர்கள் வழிமறித்த நிலையில் அவர்களிடம் அமைச்சர் கோபமாக பேசினார். அப்போது, அமைச்சருக்கு பாதுகாப்பாக சென்ற போலீஸார் போராட்டக்காரர்களை தடுக்க முயன்றனர். அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அமைச்சர் வீணா ஜார்ஜ் ரயில் பயணத்தை ரத்துசெய்துவிட்டு கண்ணூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

பின்னர் நேற்று இரவு 9 மணியளவில் மேல் சிகிச்சைக்காக அவர் பரியாரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அமைச்சர் வீணா ஜார்ஜை முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.

மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அமைச்சர் வீணா ஜார்ஜ்

இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “கண்ணூரில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது கே.எஸ்.யு நடத்திய தாக்குதல் காங்கிரஸின் கீழ்த்தரமான அரசியலை காட்டுகிறது. கண்ணூர் ரயில் நிலையத்தில் நடந்தது சாதாரண ஒரு போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ அல்ல. ஒரு கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டமாகும். ​இந்தியாவிலேயே மிகச்சிறந்த சுகாதாரத் துறையைக் கொண்டது கேரளா.

இது அனைத்து அதிகாரப்பூர்வ ஏஜென்சிகளாலும் அங்கீகரிக்கப்பட்டதாகும். அப்படியிருந்தும் சில சம்பவங்களை மிகைப்படுத்தி, அதில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத அமைச்சருக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவது அரசியல் அநாகரிகமாகும். தொண்டர்களை ஏவி விட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கலாம் என்றோ அல்லது கலவரத்தை உண்டாக்கலாம் என்றோ காங்கிரஸ் தலைமை நினைக்க வேண்டாம். ​இது பெண்களுக்கு எதிரான தாக்குதலாகும். சுகாதாரத்துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் அத்துமீறி நுழைவதற்கும், அங்கு மலர் வளையம் வைப்பதற்கும் இளைஞர் காங்கிரஸாரைத் தூண்டிவிட்டது காங்கிரஸ் தலைமைதான்.  ​இது மிகவும் கண்டிக்கத்தக்கதும், வேதனைக்குரியதுமாகும்” என்றார்.

அமைச்சர் வீணா ஜார்ஜை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன்

அதே சமயம் கே.எஸ்.யு அமைப்பினர் மூன்று நான்குபேர் மட்டுமே அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அவர்கள் தாக்குதலில் ஈடுபடவில்லை எனவும் சுமார் 35-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு இருந்ததாகவும் அதில் முழுமையான வீடியோ வெளியே வரவில்லை எனவும் காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் நிர்வாகிகள் 5 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை நோக்கி சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ பேரணி நடத்தியது. எஸ்எப்ஐ பேரணிக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் களம் இறங்கியதை அடுத்து ​ வன்முறையாக மாறியது. இருதரப்பினரும் மாறி மாறி கல்வீச்சிலும் ஈடுபட்டனர். காவல்துறையினர் சிரமப்பட்டு இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தி மோதலை முடிவுக்கு கொண்டுவந்தனர். அதே சமயம் காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தை தாக்க எஸ்.எப்.ஐ அமைப்பினருக்கு போலீஸார் ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *