அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் நலத்திட்ட உதவி மனுக்கள் மீது உடனே தீர்வு: அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவு | Immediate solution of welfare assistance applications at unorganized workers welfare boards

1353826.jpg
Spread the love

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவிட்டுள்ளார்.

தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் தேனாம்பேட்டை டி.எம்.எஸ், வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை தாங்கினார். துறை செயலாளர் கொ.வீரராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் நலன் மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை நிறைவேற்ற தொழிலாளர் துறை அலுவலர்கள் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். இத்துறையின் கீழ் இயங்கும் 20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள், வாரிய உறுப்பினர்களை விரைவாக சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைப்புசாரா வாரியங்களில் பெறப்படும் மனுக்களின் மீது உடனுக்குடன் தீர்வு காணவும், நிலுவை ஏதுமின்றி செயல்படவும் வேண்டும். குறிப்பாக, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி மானியம் தொடர்பான கேட்பு மனுக்களின் மீது தனிக் கவனம் செலுத்தி சரியான விண்ணப்பங்களைக் கண்டறிந்து பயனாளிகளுக்கு பயன் கிடைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், அமைப்புசாரா நல வாரியங்களில் பெறப்படும் பதிவு மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை நிலுவையின்றி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ‘கிக்’ தொழிலாளர்களை அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக அதிக அளவில் பதிவு செய்ய வேண்டும். பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் கணேசன் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *