அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்காக ஜாம்நகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. ஆனால் மாநிலம் முழுக்க வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், அதே துரிதவேகத்தில் நடவடிக்கை எடுக்க யாருமே வரவில்லை என்று மாநில மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஜாம்நகர் விமான தளம், தொழிலதிபர் முகேஷ் அம்பானியில் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் திருமண நிச்சயதார்த்த நிகழ்வுகளுக்காக சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கப்பட்டு, அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டது.
ஜாம்நகர் விமான நிலையத்தில், ராணுவ விமான தளத்துடன், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான விமான நிலையம் ஒன்று உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு, சராசரியாக 5 முதல் அதற்கும் குறைவான முன்பே திட்டமிடப்பட்ட விமானங்கள் மட்டுமே வந்து செல்லும். அதில், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத்தில் இருந்து வரும் விமானங்களும் உள்ளடக்கம்.
ஆனால், மார்ச் மாதம் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் நிச்சயதார்த்த விழாவுக்காக, அந்த விமான தளம், சர்வதேச விமான நிலையம் என்ற அளவுக்கு மாற்றப்பட்டது. அங்கு மார்ச் 1ஆம் தேதி தரையிறங்கிய விமானங்களின் எண்ணிக்கை மட்டும் 70. இதில், தனியார் ஜெட்கள், சார்ட்டட் விமானங்கள் என பல வகையான விமானங்களும் அடக்கம்.
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும், முக்கிய விருந்தினர்களை அழைத்துக் கொண்டு வந்த விமானங்களும் இங்குதான் தரையிறக்கப்பட்டன. அந்த அளவுக்கு, தொழிலதிபரின் மகன் திருமணத்துக்காக, மிகத் துரித கதியில், ஒரு சாதாரண விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது.
இங்கு வந்திறங்கிய விருந்தினர்கள் குஜராத் காலசார இசையுடன் மிகச் சிறப்பாக வரவேற்கப்பட்டனர். ஆனால், இன்று குஜராத்தில் கடந்த மூன்று நாள்கள் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், மேலும் ஐந்து நாள்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்திருக்கும் ஜாம்நகரில் மீட்புப் பணிக்காக ஏன் துரிதகதியில் யாருமே வரவில்லை என்பதே அந்த மாநில மக்களின் கேள்வி.