“அம்பியாகவும் அந்நியனாகவும் மாறும் சீமான்…” – விஜய் விவகாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் | Suddenly Ambi and Suddenly Anniyan, the Seeman needs no Answer says Premalatha Vijayakanth on vijay issue

1335229.jpg
Spread the love

மதுரை: “திடீரென அம்பியாகவும் திடீரென அந்நியனாகவும் மாறும் சீமானுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக தேர்தல் பணிக் குழு செயலாளர் அழகர்சாமி மகன் திருமண விழா திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்தது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த பங்கேற்று, மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் பேசியது: “கேப்டன் மதுரைக்கு வந்தால் குழந்தையாக மாறிவிடுவார். அவர் எம்ஜிஆரின் தொண்டர், ரசிகர், விசுவாசி. எங்களது பெற்றோர் இரட்டை இலைக்குத்தான் வாக்களிப்பர். எம்ஜிஆர் வேறு, கருப்பு எம்ஜிஆர் வேறு அல்ல. 2011-ல் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே கூட்டணியாக சேர்ந்தனர். சில துரோகிகளின் சூழ்ச்சியால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. கூட்டணியை உடைக்க, சில துரோகிகளை உருவாக்கினர்.

எடப்பாடியாரும், நானும் எத்தனை துரோகம், சூழ்ச்சிகள் வந்தாலும், அத்தனையும் வீழ்த்தி 2011 வரலாறை 2026-ல் நிகழ்த்துவோம். விருதுநகரில் விஜய பிரபாகரன் சூழ்ச்சி மற்றும் துரோகிகளால் வீழ்த்தப்பட்டார். அவர் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டார். எவ்வளவு வேலை இருந்தாலும் கேப்டன் கந்த சஷ்டி விரதம் நிச்சயமாக கடைப்பிடிப்பார். 2026-ல் சரித்திர சகாப்தம் படைத்தே தீருவோம். 200 தொகுதி அல்ல 234 தொகுதிகளிலும் வெற்றியைப் பெறுவோம்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் கடக்க வேண்டிய பாதைகள் ஏராளமாக உள்ளன. எங்கள் கட்சியிலேயே தேசியமும், திராவிடமும் உள்ளது. கேப்டன் தமிழை நேசித்தவர். தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காமல் சரித்திரம் படைத்தார். தமிழ் மொழியை காப்போம், பிற மொழியை கற்போம் எனக் கூறியவர் கேப்டன். தேசியத்தில் தான் திராவிடமும், திராவிடத்தில் தான் தமிழகமும் உள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்ல பெயர் வாங்கினால் மட்டுமே திமுக இருக்க முடியும். தெலுங்கர் குறித்து நடிகை கஸ்தூரி கூறியதற்கு நான் பதில் சொல்லத் தேவை இல்லை. மாநாட்டுக்கு முன்பும், பின்பும் விஜய் குறித்து சீமான் பேச்சில் மாற்றம் உள்ளது. அவர் திடீரென்று அந்நியனாகவும், அம்பியாகவும் மாறுவார். இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை. எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வைகைச் செல்வன், ராஜேந்திர பாலாஜி, தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *