கம்யூனிஸ்ட், சுதந்திரப் போராட்ட வீரர், மிக மூத்த அரசியல் தலைவர், வாழ்நாள் போராளி என ஒட்டுமொத்த மக்களாலும் போற்றிப் புகழப்படும் நல்லகண்ணு தனது 101 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார்.
கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் நல்லகண்ணு இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட தன் வாழ்நாள் முழுவதையும் பொது வாழ்விற்காக அர்ப்பணித்துக் கொண்ட இந்த மாமனிதரின் அசாத்தியமான சாதனைகளைப் பலரும் நினைவுக்கூர்ந்து வருகின்றனர்.
தெற்காசியாவின் மிக மூத்த மார்க்ஸிய, பெரியாரிய, அம்பேத்கரிய பேரறிஞர்களில் ஒருவரான தோழர் எஸ்.வி. ராஜதுரை, நல்லகண்ணு குறித்து பகிர்கையில், “1980- களில் இருந்தே தோழர் நல்லகண்ணு எனக்கு நல்ல பரிச்சயம். தமிழில் நான் மொழிபெயர்த்த ‘கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை’ நூலினை தோழர் நல்லகண்ணு தலைமையில் 2013-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வெளியிட்டோம்.
அந்த நிகழ்வில் பங்கேற்ற அவர், நீண்ட சிறப்புரையை நிகழ்த்தினார். பெரியார் மீதும் அம்பேத்கர் மீதும் நல்ல மதிப்பும் பற்றுக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு. இருவரையும் விலக்கி வைத்துவிட்டு கம்யூனிஸத்தை இங்கு வளர்க்க முடியாது என்பதை மிக உறுதியாக நம்பினார். அதேபோல், மஹாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்ட அம்பேத்கரின் படைப்புகளை தமிழில் கொண்டுவந்து சேர்த்த பெருமை தோழர் நல்லகண்ணுவிற்கே உரியது.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் சேர்மனாகப் பொறுப்பு வகித்த காலத்தில் இந்த முயற்சியில் தீவிரமாக இறங்கிய அவர், அம்பேத்கர் அறக்கட்டளை மூலம் நிதியைப் பெற்று இதைச் சாத்தியமாக்கினார். 37 பாகங்களாக வெளிவந்துள்ள அம்பேத்கரின் படைப்புகளை மலிவு விலையில் தமிழ் வாசகர்களின் கைகளுக்குக் கொண்டு வந்து சேர்த்ததைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் இந்த முன்னெடுப்பு மிகவும் போற்றுதலுக்குரியது” என்றார்.