அம்பேத்கர் பிறந்தநாளில் காலை 7.30 மணிக்கே மணிமண்டபத்தை திறக்க உத்தரவு – அர்ஜூன் சம்பத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி | Ambedkar birthday Order to open the Mani Mandapam at 7.30 am; HC allows Arjun Sampath

1357664.jpg
Spread the love

சென்னை: அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்.14-ம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தை காலை 7.30 மணிக்கே திறக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சட்டக் கல்லூரி மாணவி அன்பரசி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், “சட்டமேதை அம்பேத்கரின் 135-வது பிறந்த தினம் வரும் ஏப்.14 அன்று விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணி மண்டபத்துக்கு ஏராளமான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் வருகை தந்து அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தவுள்ளதால் அன்றைய தினம் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மணி மண்டபத்தை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” எனக் கோரி வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், “அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னி்ட்டு ஏப்.14-ம் தேதியன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அவரது மணி மண்டபத்தை திறந்து வைத்து பொதுமக்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மணி மண்டபத்துக்கு வருகை தருவோருக்கு போதுமான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அமர போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது,” என தெரிவிக்கப்பட்டது.

அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “அம்பேத்கரின் பிறந்த தினத்தன்று அவரது மணி மண்டபத்தை அரை மணி நேரம் முன்னதாக காலை 7.30 மணி முதல் திறந்து பொதுமக்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்த அனுமதிக்க வேண்டும். அத்துடன் அம்பேத்கரின் பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் அமைதியாக கொண்டாடுவதை அரசும் உறுதி செய்ய வேண்டும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டுள்ளார்.

அர்ஜூன் சம்பத்துக்கு அனுமதி: இதேபோல, அம்பேத்கர் பிறந்த தினத்தன்று சென்னையில் உள்ள அவரது மணி மண்டபத்துக்கு சென்று அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தவுள்ள இந்து மக்கள் கட்சியின் தலைவரான அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 25 பேர் அவரது சிலைக்கு காவி வேட்டி, விபூதி, குங்குமம், சந்தனப் பொட்டு அணிவிக்க மாட்டோம், வாத்தியங்கள் முழங்க மாட்டோம், கோஷங்கள் எழுப்ப மாட்டோம் என்ற உத்தரவாதத்துடன் பங்கேற்கலாம்.

அதேநேரம் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினரை பட்டினப்பாக்கம் போலீஸார் மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் தங்களது போலீஸ் வாகனத்தில் அழைத்துச்சென்று அம்பேத்கரின் சிலைக்கு மாலையணிவிக்க அனுமதியளிக்க வேண்டும். இந்நிகழ்வின்போது எந்தவொரு சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல் போலீஸார் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதற்காக மாலை 3.30 மணிக்கே அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 25 பேரும் பட்டினப்பாக்கம் காவல் ஆய்வாளர் முன்பாக ஆஜராக வேண்டும், என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *