அரியலூர்: ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு இன்று (டிச.6) மாலை அணிவித்த விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி எம்பியுமான திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பொது மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டவும் இந்த நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதி மொழி ஏற்கிறது.
தமிழகத்தில் புயல் வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளன. மேலும், பொருட்களையும் மக்கள் இழந்துள்ளனர். தமிழக முதல்வர் ரேஷன் அட்டைக்கு ரூ.2,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது போதாது என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ரூ.5,000 வழங்கப்படுவது போல் இங்கு வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.
தமிழகத்துக்கு வெள்ள நிவாரணமாக மத்திய அரசு ரூ.2,475 கோடி வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்களவை உறுப்பினர்கள் சார்பில் உள்துறை நிதியமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. அம்பேத்கர் புத்தகம் வெளியிடப்படுவதற்கு வாழ்த்துக்கள். விழாவில் பங்கேற்க முடியாத நிலையில் வருந்துகிறேன்.” என்றார்.