அயனாவரத்தை பிரித்து கொளத்தூர் தாலுகா உருவாக்கம்: புதிய பணியிடங்கள் உடன் நிதி ஒதுக்கி உத்தரவு | Creation of Kolathur taluka by dividing Ayanavaram

1302201.jpg
Spread the love

சென்னை: சென்னை மத்திய வருவாய்க் கோட்டத்தில் உள்ள அயனாவரம் தாலுகாவை பிரித்து, புதிய கொளத்தூர் தாலுகாவை உருவாக்கி, புதிய பணியிடங்கள் ஏற்படுத்த ஒப்புதல் அளித்து, நிதியும் ஒதுக்கி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வருவாய்த் துறை செயலர் வெளியிட்டுள்ள அறிவிக்கை விவரம்: தமிழக அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எழுதிய கடிதத்தில், சென்னை மாவட்டம், மத்திய வருவாய் கோட்டத்தில் உள்ள அயனாவரம் வருவாய் வட்டத்தை சீரமைத்து கொளத்தூர் எனும் புதிய வருவாய் வட்டம் (தாலுகா) உருவாக்குவது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியரின் கருத்துரு பரிசீலிக்கப்பட்டது.

அதில், ‘அயனாவரம் வட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் எளிதாகவும், விரைவாகவும் சென்றடைய ஏதுவாக, புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என்றும், அயனாவரம் வட்டத்தில் உள்ள 8 வருவாய் கிராமங்களில் 5 கிராமங்களை அயனாவரம் வட்டத்திலேயே தொடர்ந்து இருத்தி வைத்து, மீதமுள்ள 3 வருவாய் கிராமங்களில் கொளத்தூர் கிராமத்தை கொண்டு கொளத்தூர் குறுவட்டம், சிறுவள்ளூர், பெரவள்ளூர் ஆகிய 2 வருவாய் கிராமங்களை கொண்டு பெரவள்ளூர் குறுவட்டத்தையும் உள்ளடக்கி கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கலாம்.

மேலும், புதிய வருவாய் வட்டத்துக்கு அனுமதிக்கப்பட வேண்டிய 42 பணியிடங்களில், அயனாவரம் வட்டத்தில் உள்ள மிகை பணியிடங்கள் 7 மற்றும் புதிதாக 35 பணியிடங்கள் உருவாக்கலாம், ஒரு ஓட்டுநர் பணியிடமும் தோற்றுவிக்கலாம்’ என்றும் தெரிவித்துள்ளார். எனவே, அயனாவரம் வருவாய் வட்டத்தை மறுசீரமைத்து கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கலாம்’ என்று தனது கடிதத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் பரிந்துரைத்தார்.

மாவட்ட ஆட்சியர் கருத்துரு, வருவாய் நிர்வாக ஆணையரின் கடிதம் ஆகியவற்றை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, கொளத்தூர், பெரவள்ளூர், சிறுவள்ளூர் ஆகிய 3 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய கொளத்தூர் வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது. மேலும், இந்த வருவாய் வட்டத்துக்கு தேவைப்படும் 42 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது. புதிய வருவாய் வட்டத்துக்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவுக்கு ரூ.2.91 கோடியும், தொடரா செலவினம், ரூ.32.22 லட்சமும் ஒதுக்கி உத்தரவிடப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *