சென்னை மத்திய வருவாய்க் கோட்டத்தில் உள்ள அயனாவரம் தாலுகாவை இரண்டாகப் பிரித்து புதிய வட்டமாக கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, புதிய கொளத்தூர் தாலுகாவை தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அயனாவரம் வட்டத்தில் சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியங்கள், வருவாய் ஆவணங்கள், சமூகம், வருமானம் மற்றும் சட்ட வாரிசுக்கான பல்வேறு சான்றிதழ்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை, அப்பகுதி குடியிருப்பாளர்கள் எளிதாக அணுகுவதற்காக அயனாவரம் தாலுகாவை இரண்டாகப் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.கே.எம். காலனியில் உள்ள தாலுகா அலுவலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார். புதிய கொளத்தூர் வட்டத்துடன், சென்னை இப்போது 17 வட்டங்களைக் கொண்டுள்ளது. தற்போது அயனாவரத்தின் பரப்பளவு 9.06 சதுர கிலோமீட்டராகவும், கொளத்தூர் 6.24 சதுர கிலோமீட்டராகவும் உள்ளது.