அயோத்தி ராமர் கோயிலில் நமாஸ் செய்ய முயற்சி: காஷ்மீர் பிரஜையின் செயலால் அதிர்ச்சி!

Spread the love

அயோத்தியில் ராமர் கோயில் சமீபத்தில்தான் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. அக்கோயிலுக்கு தினமும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு நேற்று ஒருவர் காஷ்மீர் பிரஜை போன்று உடையணிந்து வந்தார். அவர் கோயில் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் கோயிலின் தென்பகுதியில் உள்ள சீதா கோயில் அருகில் அமர்ந்து திடீரென நமாஸ் செய்ய ஆரம்பித்தார். இதைபார்த்த பாதுகாப்பு படையினர் அவரை நமாஸ் செய்ய விடாமல் தடுத்தனர்.

உடனே அவர் உருது மொழியில் ஏதோ மந்திரங்களை சொன்னார். இதனால் அவரை போலீஸார் பிடித்துச்சென்றனர். அவரிடம் விசாரித்தபோது அவரது பெயர் அகமத் ஷேக் என்றும், அவரது சொந்த ஊர் காஷ்மீரின் சோபியன் என்றும் தெரிய வந்தது. அவரிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகமோ அல்லது கோயில் நிர்வாகமோ எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. முஸ்லிம் ஒருவர் கோயில் வளாகத்தில் நுழைந்து நமாஸ் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் வளாகத்தை சுற்றிலும் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அசைவ உணவுகளை சாப்பிட தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதோடு கோயிலில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் ஹோட்டல்களிலும் அசைவ உணவு மற்றும் மது விற்பனை செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட உதவி உணவு கமிஷனர் மணிக் சந்திர சிங் கூறுகையில், “

ராமர் கோவில் பகுதியைச் சுற்றி அசைவ உணவு விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் இந்த விதிகளைப் பின்பற்றுவதில்லை என்று புகார்கள் வந்தன. சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட அசைவ உணவு வழங்கப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ராமன் கோயில் பகுதியிலும் அருகிலுள்ள இடங்களிலும் அசைவ உணவை ஆன்லைனில் விநியோகம் செய்வதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராவது இந்த உத்தரவை மீறினால், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”‘என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *