“தமிழக அரசியலில் தவெக ஒரு சுட்டி டிவி. அங்கே நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான வசனத்தை எழுதிக் கொடுப்பது வேறு யாரோ” என்று திமுக செய்தித்தொடர்பு பிரிவு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டியிலிருந்து…
திமுக அல்லது அதிமுக என்ற நிலை மாறி தற்போது தவெக-வும் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறதே..?
அப்படி ஒரு தாக்கம் வரும் எனத் தோன்றவில்லை. 1990-களில் இருந்தே திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக சுமார் 20 சதவீத வாக்கு வங்கி இருந்து வருகிறது. அதை 1990-களில் மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் பெற்றன. காங்கிரஸும் பாஜக-வும் அந்த 20 சதவீதத்துக்குள்ளே தான் வாக்குகளை பெற்றுவந்தன. அதன்பின் விஜயகாந்த் அந்த இடத்துக்கு வந்தார். 2016-க்கு பின்பு சீமான் அதை நிரப்பினார். ஒருவேளை, அந்த இடத்தை தற்போது விஜய் பிடிக்கலாம்.
தங்கள் கூட்டணி உறுதியாக இருப்பதாக திமுக கூறிவரும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் தவெக-விடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வருகிறதே..?
பிஹார் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அதை வைத்து தமிழகத்தில் ராகுல் காந்தி ஒரு மாற்று முடிவெடுப்பார் என்பது ஹேஸ்யம். திமுக-வுக்கு அரசியல் ரீதியாக ஒரு நெருடலை உருவாக்க இந்தக் கதை சொல்லப்படுகிறது. ராகுல் காந்திக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நேர்மையானது. மாநில சுயாட்சி உரிமைகளுக்காக ராகுல் காந்தி பேசுகிறார். தேசிய அரசியலை எங்கள் தலைவர் பேசுகிறார். எனவே, இந்த உறவு ஒரு தேர்தல் ஆதாயத்துக்காக உடையும் என்று நான் நம்பவில்லை.
இதுவரை 13 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்துள்ள நிலையில், இப்போது மட்டும் எதிர்ப்பது ஏன் எனக் கேட்கிறாரே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்?
இதற்கு முன்பெல்லாம் உச்ச நீதிமன்றம் தலையிட்டதா… இப்போது ஏன் தலையிடுகிறது? கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் இதை எதிர்க்கின்றன. ஒரு குடிமகனின் குடியுரிமையை கேள்வி கேட்க தேர்தல் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. 18 வயது நிரம்பிய இந்திய குடிமகனுக்கு அரசு வழங்கிய அடையாள அட்டையை வைத்து, அவர் அந்த முகவரியில் இருக்கிறாரா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். ஆனால், இப்போது குடியுரிமையைச் சோதிப்பது ஜனநாயகத்தை திருடும் முயற்சி. பான் கார்டு, வங்கிக் கணக்கு என அனைத்துடனும் ஆதாரை இணைக்கும்போது, வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க மறுப்பது ஏன்?
எஸ்ஐஆரை புறக்கணிப்பதாகச் சொல்லிவிட்டு வழக்கு தொடர்ந்தீர்கள். இப்போது, எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க குழுவையும் வார்ரூமையும் அமைத்திருக்கிறீர்கள். இதெல்லாம் முரண்பாடாக இல்லையா?
இது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாதது. மாநிலத்துக்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்கிறோம். ஆனால், ஆளுநரிடம் செல்லாமல் இருக்க முடிகிறதா? அதுபோலத்தான் இதுவும். தேர்தல் ஆணையம் தவறு செய்கிறது என்பதை நாங்கள் சட்டரீதியாக நீதிமன்றத்தில் எதிர்க்கிறோம். எனினும் அந்த தவறு சரிசெய்யப்படும் வரை களத்தில் மக்களின் உரிமைகளை பாதுகாக்க பணியாற்ற வேண்டும். இரண்டையும் ஒருசேர செய்வதே ஜனநாயகம்.
பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனவே?
இது தவறானது. மத்திய அரசின் சமூகப் பாதுகாப்பு குறியீட்டின்படி, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான். வட மாநிலங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள்கூட, பாதுகாப்புக்காக தமிழகம் வர விரும்புகிறார்கள். எங்கோ நடக்கும் ஓரிரு சமூக, விரோத செயல்களை வைத்து மாநிலத்தின் மீது பழி சுமத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது. தவறு நடந்தவுடன், அரசு எடுக்கும் உடனடி நடவடிக்கைகளே எங்கள் ஆட்சியின் தனித்த அடையாளம்.
இடங்களை ஒதுக்குவதிலும், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையிலும் கூட்டணிக் கட்சிகள் முரண்டுபிடித்தால் சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
இது ஜனநாயகத்தில் இயல்பானது. தங்கள் கட்சியை வளர்க்க ஒவ்வொருவரும் அதிக இடங்களை கேட்பதில் தவறில்லை. அதேசமயம், எதிர்க்கட்சியாக இருந்ததைவிட ஆளும் கட்சியான பிறகு திமுக-வின் பலமும் அதிகரித்துள்ளது என்பதை அவர்களும் அறிவார்கள். திமுக கூட்டணியின் அடித்தளமே கொள்கையும், தத்துவமும் தான். எனவே, இதை தலைவர்கள் சுமுகமாகப் பேசி தீர்ப்பார்கள்.
திமுக-வின் கபட நாடகத்தை பார்த்து நாடே சிரிப்பதாகவும், தவெக ‘பக்கா மாஸ்’ கட்சியாக வந்திருப்பதாகவும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளாரே?
முதலில், அவர்களுக்கு எத்தனை மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலாளர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிடச் சொல்லுங்கள். ஒரு கட்சியின் பலம் அதன் கட்டமைப்பில்தான் இருக்கிறது. எங்களை பொறுத்தவரை, அரசியலில் தவெக ஒரு சுட்டி டிவி. அங்கே நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான வசனத்தை எழுதிக் கொடுப்பது வேறு யாரோ. அந்த நாடகங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை.
வரும் தேர்தலுக்கும் திமுக-வின் தேர்தல் அறிக்கையில் மக்களைக் கவரும் வித்தியாசமான வாக்குறுதிகளை எதிர்பார்க்கலாமா?
எப்போதுமே திமுக-வின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன். இந்த முறையும் அது தொடரும். அடுத்த தலைமுறை இளைஞர்களை மையமாக வைத்து, தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒரு சூப்பர் ஸ்டார் திட்டம் நிச்சயம் இடம்பெறும். மேலும், மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களும் அதில் இருக்கும்.