“அரசியலில் நடிகர் விஜய் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” – திருமாவளவன் | I wish actor Vijay success in politics – VCK leader Thirumavalavan

1301704.jpg
Spread the love

திருச்சி: “அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் ஆஜராக செல்லும் வழியில் இன்று (ஆக.27) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “அக்டோபர் 2-ம் தேதி அன்று கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டை நடத்த இருக்கிறோம். இந்தியா முழுவதும் மதுவிலக்கை ஒரு மாநில அளவிலான பிரச்சினையாக கருதாமல் தேசிய பிரச்சினையாக கருத்தில் கொண்டு தேசிய மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிற மாநாடாக இந்த மாநாடு அமையும். நூறு சதவீதம் மதுவிலக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

இந்த மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகள், சமூக நல அமைப்புகளை ஒருங்கிணைத்து தொடர் பரப்புரையில் ஈடுபட இருக்கிறோம். இந்த மாநாட்டுக்கு அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஆதரவு வழங்கிட வேண்டும். தொழில் முதலீட்டு நிறுவனங்களை சந்திக்க அமெரிக்கா செல்லும் தமிழக முதல்வரின் நோக்கம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் எங்கிருந்தாலும் நிர்வாகத்தை கவனித்துக்கொள்ளும் தொலைதொடர்பு வசதி பெருகி உள்ள காலத்தில் 15 நாட்கள் அமெரிக்கப் பயணம் செல்லும் தமிழக முதல்வர், துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களை துணை முதல்வராக நியமிக்கலாம் என்கிற யோசனை திமுகவை சீண்டுவதற்காக தெரிவிக்கும் ஒரு கோரிக்கை அவ்வளவுதான். இதில் கருத்துச் சொல்வதற்கு எதுவும் இல்லை.

அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், அரசியலில் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகள். அரசியல் களம் கடினமானது. போராட்டங்கள் நிறைந்தது. பல்வேறு சவால்களை தாக்குப் பிடித்து நிற்க வேண்டும். மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டும். இதற்குப் பிறகுதான் நாம் விஜய்யின் செயல்பாடு குறித்து கருத்துச் செல்லமுடியும்.

பழநியில் இந்து சமய அறநிலையத்துறை நடத்திய முருகன் மாநாடு பல லட்சம் மக்களின் ஆதரவுடன் சிறப்பாகவே நடந்தேறி இருக்கிறது. அதில் விமர்சிப்பதற்கு வேறொன்றும் இல்லை. ஆனால், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய கல்லூரிகளில் பக்தி இலக்கியங்கள் தொடர்பான போட்டிகள் நடத்தப்படும் என்று சொல்லி இருப்பது பரவலாக ஒரு விவாதத்தை எழுப்பி இருக்கிறது. அது மதம் சார்ந்த நடவடிக்கையாக அமைந்து விடாமல் அரசு கவனித்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *