அரசியல் ஆதாயத்துக்காக கண்ணியமற்ற செய்திகள் வெளியீடு: அண்ணாமலைக்கு அமைச்சர் காந்தி பதிலடி | Publishing indecent news for political gain: Minister Gandhi responds to Annamalai

1350428.jpg
Spread the love

சென்னை: “மாநிலத்தில் உள்ள, பல ஐஏஎஸ் அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கைத்தறி இயக்குநர் பணியிட மாற்றத்தை மட்டும் திரித்து, அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, வேட்டி சேலைகள் வழங்குதல் மற்றும் நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குதல் ஆகிய இரு சீரிய நோக்கங்களுடன், ஒவ்வொரு ஆண்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

27.08.2024 மற்றும் 23.10.2024 தேதியிட்ட அரசாணைகளின்படி, பொங்கல் 2025 திட்டத்துக்கு மொத்தத் தேவையான 1.77 கோடி வேட்டிகள் மற்றும் 1.77 கோடி சேலைகளை உற்பத்தி செய்ய ஆணைகள் வெளியிடப்பட்டது. இவ்வரசாணைகளின்படி, இத்திட்டத்துக்கு தேவையான சேலைகள் மற்றும் வேட்டிகள் முழுமையாக தமிழகத்திலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள கைத்தறிகள், பெடல்தறிகள் மற்றும் விசைத்தறிகளின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

40s பாலிகாட் கிரே நூல் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. 40எஸ் பருத்தி சிட்டா நூல், தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்திடமிருந்து 15 சதவீத சிட்டா நூல் மானியத்துடன் கொள்முதல் செய்யப்பட்டது. 60s சாயமிட்ட பருத்தி நூல் மற்றும் பாலியஸ்டர் ஊடை நூலினை தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம், 1998 மற்றும் விதிகள் 2000-ன்படி, தேசிய அளவிலான ஒப்பந்தப்புள்ளி மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.

சங்கங்களுக்கு விநியோகம் செய்யப்படும் நூல் ரகங்கள், அரசு நூல் கிடங்குகளில் பெறப்பட்டு, நூல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவை SITRA-வின் விசைத்தறி சேவை மையம் (Powerloom Service Centre), Textile Committee மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தரப்பரிசோதனை மையங்களில் தரப்பரிசோதனை செய்யப்பட்டு, தேர்வு பெற்ற நூல் மாதிரிகள் அடங்கிய லாட்டுகள் மட்டுமே, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, வேட்டி சேலைகள் உற்பத்திக்காக அனுப்பப்படுகிறது.தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நூல் பெறப்பட்டவுடன், ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்ட பசை போடும் மற்றும் பாவு ஓட்டும் ஆலைகள் மூலமாக இந்நூல்களுக்கு பசை போட்டு பாவு ஓட்டி சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உற்பத்திக்காக வழங்கப்படுகிறது.

சங்க உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்பட்டு சங்கத்தில் வரவு வைக்கப்பட்ட வேட்டி சேலைகள், கோ-ஆப்டெக்ஸ், தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு பஞ்சாலை கழகம் ஆகிய 3 கொள்முதல் முகமை கிடங்குகளில், 100% தர ஆய்வு செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் கூடிய வேட்டி சேலைகளை, மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டது. மேலும், இத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்த, தறி மேற்பார்வை குழு, நூல் தரப்பரிசோனை மேற்பார்வை குழு, பாவு நூல் பசைபோடும் பணி மேற்பார்வை குழு, உயர்மட்ட கண்காணிப்பு அலுவலர் குழு, தரக்கட்டுப்பாடு பறக்கும் படை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு விநியோகம் செய்வதை கண்காணிக்கும் அலுவலர்கள் ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட தர அளவீடுகளின்படி தரமான வேட்டி சேலைகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவதை உறுதி செய்ய, பொங்கல் 2025 திட்டத்தில், வேட்டி மற்றும் சேலைகளில் உள்ள பாவு நூல் மற்றும் ஊடை நூலில் உள்ள நூல் இழைகளின் கலவை தரப்பரிசோதனை மையங்களில் தரப்பரிசோதனை செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட நூல் கலவை உறுதி செய்யப்பட்ட வேட்டி சேலைகள் மட்டுமே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், பொங்கல் 2025 திட்டத்துக்கு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து கொள்முதல் முகமை நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்பட்ட வேட்டி பண்டல்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தரப்பரிசோதனையின் போது, பாலிகாட் பாவு நூலில் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளைவிட பாலியஸ்டர் சதவீதம் அதிகமாக உள்ளதென கண்டறியப்பட்ட, சுமார் 13 லட்சம் வேட்டிகள் கொண்ட பண்டல்கள், சம்மந்தப்பட்ட கொள்முதல் முகமை நிறுவனங்களிலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிராகரிக்கப்பட்டுள்ள 13 லட்சம் வேட்டிகளுக்கு பதிலாக, நிர்ணயக்கப்பட்ட தர அளவீடுகளின்படியான வேட்டிகளை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் செலவில் திருப்பி அளிக்க சம்மந்தப்பட்ட சரக கைத்தறி உதவி இயக்குநர்கள் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்க செயலாட்சியர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு பொங்கல் 2024 திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட வேட்டிகளை தரப்பரிசோதனை செய்ததில் வேட்டிகளில் இருந்து மாதிரி எடுத்து அதில் உள்ள பாவு நூலின் பருத்தி தன்மையினை பரிசோதிக்க சிட்ரா விசைத்தறி சேவை மையத்துக்கு அனுப்பப்பட்டதில், வேட்டியில் 100% காட்டன் பாவு நூல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் 2024 தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார்களுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என நிரூபணமாகியுள்ளது. இவ்வரசு பொறுப்பேற்றவுடன், தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, வேட்டி சேலையினை பொதுமக்கள் அனைவரும் விரும்பி உடுத்தும் வகையில், பொங்கல் 2023 ஆண்டு முதல், சேலைகளில் 15 புதிய வண்ணங்களிலும், வேட்டிகளில் அரை இன்ச் பார்டரினை 1 இன்ச் பார்டராக அதிகப்படுத்தி, 5 புதிய வண்ணங்களிலும் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படுகிறது. இது பொது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் பொங்கல் 2017 முதல் 2021 வரை 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த கொள்முதல் விலை நிர்ணய நிலுவைத் தொகை ரூ.148.71 கோடி தொகையினை, நெசவாளர் சங்கங்களுக்கு விடுவித்து வழங்கப்பட்டுள்ளது. கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலினை பாதுகாக்கவும், நெசவாளர்களின் நலனை மேம்படுத்தும் பொருட்டும் தமிழக அரசால் கீழ்கண்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தமிழக முதல்வரின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றவுடன் அனைத்து தரப்பு மக்களின் நலனையும் உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு துறையிலும் சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கைத்தறி தொழிலின் வளர்ச்சி மற்றும் நெசவாளர்களின் நலனுக்காக இவ்வரசு சீரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தினை தொடர்ந்து பேணி பாதுகாத்து வருகிறது.

மேலும், அரசு அலுவலர்களின் பணியிடமாற்றமானது நிர்வாக காரணங்களின் பொருட்டு மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறை ஆகும். அதன்படி, 31.01.2025 தேதியிட்ட அரசாணையின்படி, 20-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதில், கைத்தறி இயக்குநரின் பணியிட மாற்றமும் ஒன்றாகும். மாநிலத்தில் உள்ள, பல ஐஏஎஸ் அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கைத்தறி இயக்குநர் பணியிட மாற்றத்தை மட்டும் திரித்து, அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

ஆதலால், உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற, தேவையற்ற வதந்திகளை பரப்பும் நோக்கத்துடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, அரசியல் ஆதாயத்துக்காக கண்ணியமற்ற முறையில் செய்திகளை வெளியிடுவது, மாநில அளவில் பொறுப்பில் உள்ள அரசியல் கட்சித் தலைவருக்கு உகந்ததல்ல. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்யும் வகையில், சிறப்பாக செயல்பட்டு மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று, நல்லாட்சி செய்து வரும் திமுக அரசின் மீது, வீண் பழி சுமத்தி, களங்கம் ஏற்படுத்த பகல் கனவு காணும் எண்ணம், எந்நாளும் நிறைவேறாது என்பதை உறுதிபட தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *