வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாக, இந்திரா காங்கிரஸ், திராவிடர் கழகம், ஜனதா கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்க் கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக், குமரி அனந்தன் கட்சி, பழ நெடுமாறன் கட்சி உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவு கேட்டு கடிதம் எழுதினார் திமுக தலைவர் கருணாநிதி. அவரது கோரிக்கையை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கவில்லை.
இந்திரா காங்கிரஸ், ஜனதா கட்சி, குமரி அனந்தனின் காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். திமுகவின் ஆளுங்கட்சிக்கு எதிரான பொது வேட்பாளர் கனவு நிறைவேறவில்லை. ஆனாலும் போட்டி கடுமையாக இருந்தது.
போட்டிப்போட்ட வீடியோ பிரசாரங்கள்!
திமுக சார்பில் தேர்தல் பரப்புரை செய்திட கருணாநிதி, அன்பழகன், நாஞ்சில் மனோகரன், வைகோ, கேபி கந்தசாமி உள்ளிட்டோர் திருச்செந்தூரில் முகாமிட்டனர். அதிமுக சார்பில் ராஜா முகமது, வலம்புரி ஜான், ஜெயலலிதா முக்கியப் பேச்சாளர்களாக இருந்தனர். தேர்தல் பரப்புரை சூடுபிடித்திருந்த நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் முதலமைச்சர் எம்ஜிஆர் உண்ணாவிரதம் தொடங்கி விட்டார். தமிழ்நாட்டிற்குத் தேவையான அரிசி, மத்திய அரசு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
ஆனால், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும், திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் எம்ஜிஆர் உண்ணாவிரதம் இருப்பதாக விமர்சனம் செய்தனர். முதலமைச்சர் எம்ஜிஆருக்கு பிரதமர் இந்திரா காந்தி அழைப்பு விடுத்தார். டெல்லி சென்று திரும்பினார் எம்ஜிஆர். அரிசிப் பிரச்னையும் முடிவுக்கு வந்தது.
ஆனால், எம்ஜிஆர் உண்ணாவிரதம், டெல்லிப் பயணம் இரண்டையும் வைத்து அதிமுகவை காங்கிரஸில் இணைக்கப் போவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகின. திருச்செந்தூர் தேர்தல் பரப்புரையிலும் அந்தப் பிரச்னை எதிரொலித்தது.
ஆனால், திமுகவினர் எழுப்பிய, வேல் காணாமல் போன பிரச்னை முதல் எம்ஜிஆர் டெல்லிப் பயணம் வரை அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அதிரடியாக பதிலடி கொடுத்தார் ஜெயலலிதா. திருச்செந்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் அலைமோதியது. கிராமம் கிராமமாக மக்களை சந்தித்து தீவிர பரப்புரை செய்தார் ஜெயலலிதா. காயல்பட்டினம், குரும்பூர், உடன்குடி, ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம், மணப்பாடு உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவிற்கு மிகப்பெரிய வரவேற்பு வழங்கப்பட்டது.
ஜெ.,-வின் ஒற்றை நாற்காலி முறை – திருச்செந்தூர் போட்ட விதை
இப்போது போல சமூக ஊடகங்கள் இல்லாத காலம் அது. ஆளுங்கட்சியான அதிமுக சத்துணவுத் திட்டம் வீடியோக்களை கிராமங்களில் திரையிட்டுக் காட்டினர். எதிர்க்கட்சியான திமுக நீதி கேட்டு நெடிய பயணம் போன கருணாநிதியின் வீடியோக்களை திரையிட்டார்கள்.
மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திரா காங்கிரஸ் கட்சியும் போட்டியில் இருந்தார்கள். கருப்பையா மூப்பனார் தலைமையில் பரப்புரை செய்தனர். ஜனதா கட்சியும் அத்தொகுதியில் செல்வாக்கு பெற்றிருந்தது.
செல்லுமிடமெல்லாம், ஜெயலலிதாவின் பேச்சிற்கு கிடைத்த வரவேற்பு, பெண்களின் வாக்குகளை அதிகளவில் ஈர்த்தது.
1983 மார்ச் 1 அன்று திருச்செந்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.
தேர்தல் முடிவுகளில் 1,766 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அமிர்தராஜ் வெற்றி பெற்றார். முன்னதாக 1977 சட்டமன்ற பொதுத்தேர்தலில் இதே திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட அமிர்தராஜ் 1,135 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனதா கட்சி வேட்பாளர் சுப்பிரமணிய ஆதித்தனை தோற்கடித்திருந்தார்.
திருச்செந்தூர் இடைத்தேர்தல் ஆடுபுலி ஆட்டங்கள் அரசியல் திருப்பங்களை பெரிய அளவில் ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட, செல்வி ஜெ.ஜெயலலிதா எனும் அரசியல் ஆளுமைக்கு அங்கீகாரம் வழங்கியது. மற்றொருபுறம் ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் ஒற்றை நாற்காலி மட்டும் போடுகின்ற வழக்கமும் திருச்செந்தூரில் இருந்தே தொடங்கியது.!