சென்னை: அரசியல் கட்சிப் பேரணிகள், பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதன்படி, 50 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு காப்புத் தொகையாக ரூ.20 லட்சம் வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், வழிகாட்டுதல்களை உருவாக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன், உள்துறைச் செயலர் தீரஜ்குமார், டிஜிபி வெங்கட்ராமன், கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் பங்கேற்றனர். இதில் பல்வேறு பரிந்துரைகளை தமிழக அரசு வழங்கி உள்ளது. அதன் விவரம்:
5,000 பேருக்கு அதிகமாக கூடும் பொதுக்கூட்டம், ஊர்வலம், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம், போராட்டம், மத, கலாச்சார, வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு இந்தவழிகாட்டுதல்கள் பொருந்தும். வரையறுக்கப்பட்ட வழித்தடத்தில் மரபுப்படி நடத்தப்படும் மத வழிபாடு மற்றும் மரபுசார்ந்த நிகழ்ச்சிகள், மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் நிகழ்வுகளுக்கு இது பொருந்தாது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதிக்கப்பட்ட இடங்களில் பொதுக்கூட்டத்தின்போது சேதம் ஏற்பட்டால் ஈடுசெய்வதற்காக, எதிர்பார்க்கப்படும் கூட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப திருப்பித் தரக்கூடிய காப்புத் தொகை (டெபாசிட்) நிர்ணயிக்கலாம். அதன்படி, 5,000 முதல் 10,000 பேர் வரை என்றால் ரூ.1 லட்சம், 10,000 முதல் 20,000 பேர் வரை ரூ.3 லட்சம், 20,000 முதல் 50,000 பேர் வரை ரூ.8 லட்சம், 50,000 பேருக்கு மேல் என்றால் ரூ.20 லட்சம் காப்புத் தொகை செலுத்த வேண்டும்.
ரோடு ஷோவின்போது, சிறப்பு அழைப்பாளர் பேசும் இடத்தில் இருந்து 500 அடி தூரத்துக்கு நிகழ்ச்சி அமைப்பாளர் தடுப்பு அமைக்க வேண்டும். நிர்ணயித்த இடத்தில் மட்டுமே பேச வேண்டும். வழியில் வேறு எங்கும் உரைநிகழ்த்தக் கூடாது. சாலையோரம் மக்கள் ஒரே இடத்தில் நிலையாக கூடியிருந்து, வாகனம் சென்றதும் கலைந்து சென்றுவிட வேண்டும். சிறப்பு அழைப்பாளரின் வாகனத்தை பின்தொடர்ந்து மக்கள் செல்வதை தவிர்க்க, கூட்டத்தை தன்னார்வலர்கள் ஒழுங்குபடுத்த வேண்டும்.
நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் கட்சியின் தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி 10 நாட்கள் முன்பாகவும், 15 நாட்களுக்கு மிகாமலும் மனு அளிக்க வேண்டும். மற்றஇடங்களுக்கு 21 நாட்கள் முன்பாகவும், 30 நாட்களுக்கு மிகாமலும் மனு அளிக்க வேண்டும். கூட்டத்தினரின் பாதுகாப்பு, ஒழுங்குபடுத்துவதற்கு ஒருவர், அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ஒருவர் நியமிக்கப்பட்டு அவர்களது விவரங்களை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அரசின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகள் கருத்து கூற நவ.10 வரை அவகாசம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் சார்பில், ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ (திமுக), டி.ஜெயக்குமார், இன்பதுரை (அதிமுக), வி.பி.துரைசாமி, பாலச்சந்திரன் (பாஜக), செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார் (காங்கிரஸ்), கே.பாலகிருஷ்ணன், நாகை மாலி (மார்க்சிஸ்ட்), மு.வீரபாண்டியன், மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), சதன் திருமலைக்குமார், பூமிநாதன் (மதிமுக), முரளிசங்கர், வி.எஸ்.கோபு (பாமக), ஜவாஹிருல்லா, குணங்குடி ஹனீபா (மமக) மற்றும் தேமுதிக, கொமதேக, புரட்சி பாரதம், தவாக, ஐயுஎம்எல், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி உட்பட 20 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அரசின் பரிந்துரை விவரங்கள் வழங்கப்பட்டன. பரிந்துரைகள் குறித்து அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பேசினர். அரசின் பரிந்துரைகள் தொடர்பான கருத்துகளை தமிழக உள்துறைச் செயலருக்கு நவ.10-ம் தேதிக்குள் அஞ்சல் அல்லது மி்ன்னஞ்சலில் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது. அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் உரிய மாற்றங்களுடன் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்படும். பின்னர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, வெளியிடப்படும்.