அரசியல், பொது வாழ்க்கையில் சிறந்த பணி: ‘இந்து’ என்.ராம், அபுசாலே சரீப்புக்கு ‘காயிதே மில்லத் விருது’ | Outstanding Work on Politics and Public Life: “The Hindu” N. Ram, Abusale Sharif with “Qaide Millat Award”

1279445.jpg
Spread the love

சென்னை: அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம், நீதிபதி ராஜிந்தர் சச்சார் கமிட்டி முன்னாள் செகரெட்டரி ஜெனரல் அபுசாலே சரீப் ஆகியோருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை விருது வழங்கப்பட்டது.

காயிதே மில்லத் கல்வி மற்றும்சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு 2023-ம் ஆண்டுக்கான ‘காயிதே மில்லத் விருது’ வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அறக்கட்டளை இயக்குநர் ஏ.ரபீ வரவேற்றார். பொதுச் செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான் அறிமுக உரையாற்றினார். விருதாளர் மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம் குறித்த பாராட்டுச் சான்றிதழை நெல்லை மனோன் மணீயம் சுந்தரனார் பல்கலை. மேனாள் துணைவேந்தர் வசந்தி தேவி வாசித்து விருதாளருக்கு வழங்கினார். அதையடுத்து விருதை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா வழங்கி கவுரவித்தார்.

நீதிபதி ராஜிந்தர் சச்சார் கமிட்டி முன்னாள் செகரெட்டரி ஜெனரல் அபுசாலே சரீப் குறித்த பாராட்டுச் சான்றிதழை, சென்னை சிஎஸ்ஐ முன்னாள் பேராயர் தேவசகாயம் வாசித்து வழங்கினார். அதைத் தொடர்ந்து விருதாளருக்கு முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா விருது வழங்கினார். விழாவில் முன்னாள் நீதிபதி பேசும்போது, கண்ணியமிக்க காயிதே மில்லத், சமுதாய நலனுக்காகப் பாடுபட்டதை பட்டியலிட்டு, நாமும் தேச நலனில் அக்கறை காட்டவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஐக்கிய நாடுகள் வர்த்தக ஆலோசனைக் குழு கவுரவத் தலைவர் முகமது இக்பால் சாஹிப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்தபத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வீடியோ மூலம் விருதாளர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். விருதாளர் ‘இந்து’ என்.ராமை பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து செய்தி விழாவில் வாசிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *