அரசுக்கு கைகொடுத்த மழைநீர் வடிகால் பணி; சென்னை, புறநகர் மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு: முதல்வர் நம்பிக்கை | cm stalin says that permanent solution to chennai people soon

1327006.jpg
Spread the love

சென்னை: தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளே தற்போது கைகொடுத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்தார். இந்த பணிகள் முழுமை பெற்றால் சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதி, வேளச்சேரி வீராங்கல் ஓடை, நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு அரசால் குத்தகைக்கு வழங்கப்பட்ட 160.86 ஏக்கர் நிலம் திரும்ப பெறப்பட்டு, அங்கு 118 ஏக்கர் பரப்பில் தோட்டக்கலை துறை சார்பில் மக்கள் பயன்பாட்டுக்காக பூங்கா, பசுமைவெளி மற்றும் மக்களுக்கு தேவையான வசதிகளை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தவிர, அந்த நிலத்தில் ஏற்கெனவே உள்ள 3 குளங்கள் சென்னை மாநகராட்சி மூலம் ஆழப்படுத்தி, அகலப்படுத்தும் பணிகள் மற்றும் புதிதாக 4.24 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட 4 குளங்கள் வெட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், குளங்கள் வெட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேளச்சேரி ரயில்வே ஆறுகண் கல்வெட்டு பகுதியில் உள்ள வீராங்கல் ஓடை நீர், பள்ளிக்கரணை சதுப்புநிலம் வழியாக பக்கிங்ஹாம் கால்வாய்க்கு சென்று, பின்னர் கடலை சென்றடையும். வீராங்கல் ஓடையில் பொதுப்பணித் துறை மூலம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதையும் பார்வையிட்ட முதல்வர், பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.

நீ்ர்வளத் துறை சார்பில் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிக்கரையை பலப்படுத்துதல், நீர்ஒழுங்கிகளை சீரமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. அவற்றையும் முதல்வர் பார்வையிட்டார். அப்போது, முதல்வரிடம் பேசிய பொதுமக்கள், ‘‘கடந்த 14-ம் தேதி நள்ளிரவு துணை முதல்வர் உதயநிதி வந்து ஆய்வு செய்து, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பணிகளை துரிதப்படுத்தினார். இதனால், இப்பகுதியில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் மழைநீர் எங்கும் தேங்காமல் சென்றது. முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினர்.

பின்னர், கீழ்க்கட்டளை ஏரியின் உபரி நீர் கால்வாய் பாலத்தில் மிதக்கும் தாவரங்கள், குப்பைகளை அகற்றுதல், தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மணல் மேட்டை அகற்றுதல் ஆகிய பணிகளையும் பார்வையிட்ட முதல்வர், அவற்றை மாலைக்குள் முடிக்க உத்தரவிட்டார். பிறகு, செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிந்துவிட்டது. மழைநீர் வடிகால் பணிகள்தான் அரசுக்கு கை கொடுத்திருக்கிறது என்று நம்புகிறேன். பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை ஏற்கெனவே 3 மாதங்களாக செய்துகொண்டு வருகிறோம். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து, நான் ஆட்சிக்கு வந்தவுடனே அதற்கான பணிகளில் இறங்கினோம். அந்த பணிகளை படிப்படியாக செய்து வருகிறோம். எஞ்சியுள்ள 20 முதல் 30 சதவீத பணிகளும் விரைவில் முடிக்கப்படும். இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிச்சயம் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

மழை தொடர்பான பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் சென்னை மாநகர மக்கள் சார்பாக பாராட்டுகள், வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாக துறை செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘கனமழை குறித்த அலர்ட் பெறப்பட்டதும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, மக்களின் ஒத்துழைப்புடன் எதிர்கொண்டோம். பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்காமல் சரி செய்யப்பட்டுள் ளது. முழுமையாக மழை நீர் அகற்றப்படும் வரை தொய்வின்றி களப்பணியை தொடர்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *