அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கையை விதைத்த பேச்சாளரை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ் | Ramdoss insists to arrest the orator who instilled superstitious belief in school children

1307249.jpg
Spread the love

சென்னை: அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கையை விதைத்த பேச்சாளரை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். அவர் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக மூட நம்பிக்கையை விதைத்துள்ளார்.

அவர் பேசிய கருத்துகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்று அந்த பேச்சாளர் பேசியுள்ளார். கல்வியை விதைக்க வேண்டிய பள்ளிக: மூட நம்பிக்கையை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை முயல்வது கண்டிக்கத்தக்கது.

அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுக்கு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வழக்கமாக பள்ளிக்கு ஆண்டு விழா நடத்துவதற்கே சில ஆயிரம் ரூபாய் மட்டும் தான் செலவிடப்படும். ஆனால், மூடநம்பிக்கை பேச்சாளரின் நிகழ்ச்சிக்கு தாராளமாக செலவிடப்பட்டுள்ளது. தம்மை மகாவிஷ்ணு என்று கூறிக்கொண்ட அந்த நபருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த நபரின் மூட நம்பிக்கை பேச்சுகளை கண்டித்த ஆசிரியரை அந்த நபர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்; அதை எவரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை விட ஆசிரியர்கள் பெரியவர்களா? என்று அந்த நபர் வினா எழுப்பியுள்ளார். அந்த அளவுக்கு அவருக்கு தைரியத்தைக் கொடுத்தவர்கள் யார்?

அரசு பள்ளிகளின் மாணவ, மாணவியர் தீய பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க நீதிபோதனை வகுப்புகளை நடத்துங்கள் என்று பா.ம.க பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செய்யாத பள்ளிக்கல்வித்துறை மாணவ, மாணவிகளின் மனதில் நஞ்சைக் கலக்கும் மனிதர்களை அழைத்து வந்து இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய நிகழ்ச்சிகள் இனியும் நடப்பதை அனுமதிக்கக்கூடாது.

சென்னை அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுகளுக்கு காரணம் என்று சில ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டு இந்த சிக்கலை மூடி மறைத்து விடக் கூடாது. இந்த நிகழ்ச்சிக்கு காரணமானவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் எத்தகைய உயர்பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளின் சிந்தனையை மழுங்கடித்த அந்த மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *