அரசுப் பள்ளியில் 37.9% மாணவர்கள்தான் படிக்கிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

Spread the love

கோவை: அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. தனியார் பள்ளியில் 62.1 சதவீதம் மாணவர்கள் படிக்கிறார்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாபெரும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்று விநாயகர் அருளை பெற்றதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.

திமுக அரசு முருகன் மாநாடு நடத்தியபோது 21 தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் அதில் எட்டாவது தீர்மானத்தில், அறநிலையத்துறை கோயில்கள் இருக்கும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படும் என்று கூறினார்கள். தீர்மானம் நிறைவேற்றி ஒரு ஆண்டு முடிந்துவிட்டது, இதுவரை, ஒரு குழந்தையை கூட அழைத்து வந்து கந்த சஷ்டி பாராயணம் செய்யவில்லை. மக்களை ஏமாற்ற இதுபோன்ற பொய்களை சொல்வதே திமுக அரசுக்கு வாடிக்கை. இதற்கெல்லாம் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.

காவல்துறை அதிகாரிகளை பலிகடாவாக்கும் திமுக அரசு

தமிழ்நாட்டில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு டிஜிபிக்கு வாழ்த்துகள். முதல்வர் டிஜிபியை நியமிக்காமல் வெளிநாடு சென்றுள்ளார். காவல்துறை அதிகாரிகளை தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சங்கர் ஜிவால் ஓய்வு பெறுகிறார் என்று தெரிந்தும், முதல்வர் அதற்கான பணிகளை செய்யாமல் இருந்துள்ளார்.

பொறுப்பு டிஜிபி தேர்தல் காலத்தில்தான் நியமிப்பார்கள். ஆனால் டிஜிபி பதவிகளுக்கு தகுதியான 6 அதிகாரிகள் இருக்க அவர்களை நிராகரித்து பொறுப்பு டிஜிபியை நியமித்து உள்ளார்கள். இதன் மூலம் அவர்களது பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக அரசு.

பொறுப்பு டிஜிபி என்பதே ஒரு சட்டவிரோதமானது. எதற்காக பொறுப்பு டிஜிபியை நியமித்தீர்கள். எனவே உடனடியாக டிஜிபியை நியமிக்க வேண்டும். இல்லை என்றால் காவல் துறையிலும் அரசியலை கலந்து விட்டது திமுக.

வெள்ளை அறிக்கை வேண்டும்

முதல்வர் வெளிநாடு சென்று போட்டோ எடுத்து போட்டு ஏமாற்றுகிறார். முதல்வர் ஜெர்மன் செல்ல வேண்டிய தேவை என்ன வந்தது, அதற்கு மத்திய அரசு உள்ளதே. முதல்வர் வெளிநாடு சென்றதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

அரசுப் பள்ளியில் 37.9 சதவீதம் மாணவர்கள்

திமுக ஆட்சியில் 5 சதவீத மாணவர்கள் அரசுப் பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு சென்றுள்ளார்கள். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளியில் 37.9 சதவீதம் மாணவர்கள்தான் படிக்கிறார்கள், தனியார் பள்ளியில் 62.1 சதவீதம் மாணவர்கள் படிக்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

மேலும், உங்களுடன் ஸ்டாலின் மனு பெட்டிகளை ஆற்றில் போட்டுள்ளார்கள். உங்களுடன் ஸ்டாலின் என்பதே திருட்டுத் திட்டம்.

அமெரிக்கா 50% வரி விதிப்பு பாதிப்பு தான், ஆனால் அரசு அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சம்பந்தம் இல்லாமல் டிரம்ப் போட்ட 50% வரி விதிப்பை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சீனா அதிபர், இந்திய பிரதமர் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *