அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் | Lizard in government school meal 8 students faint

1349261.jpg
Spread the love

அரூர்: அரூர் அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சத்துணவில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் அரூர் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 915 மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் சுமார் 340 மாணவிகளுக்கு மதியஉணவு தயார் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. இதில் சத்துணவு சாப்பிட்ட மங்கையர்கரசி (16), கீர்த்தனா (16), தீபா (17), கண்ணீஸ்ரி (16), ரோகிணி ஶ்ரீ (16), கனிஷ்கா (16), சந்தியா (17), கயல்விழி (15) ஆகிய 8 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மாணவிகள் மீட்கப்பட்டு அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் 6 மாணவிகள் வீடு திரும்பிய நிலையில், கனிஷ்கா, சந்தியா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாலையில் இவர்களும் வீடு திரும்பினர். இதுகுறித்து தகவலறிந்த அரூர் கோட்டாட்சியர் சின்னுசாமி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை செய்தார். சத்துணவில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக உணவு மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் விசாரணைக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவிகளை கோட்டாட்சியர் மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் ஆகியோர் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *