அரசுப் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: நயினார் நாகேந்திரன் சாடல் | BJP state president Nainar Nagendran condemned dmk govt

1374312
Spread the love

சென்னை: ‘அரசுப் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது’ என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவதோடு, பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக மாணவிகள் குற்றம்சாட்டி காணொளி வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

பள்ளியில் புகார் அளித்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணையும் குறைத்துவிடுவர் என்று அந்த மாணவிகள் பேசுவது அரசுப் பள்ளிகளில் பாலியல் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல்ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் கல்வி தரமாக இருக்காது என்ற தவறான எண்ணம் பொதுப்புத்தியில் இருக்கையில், தற்போது மாணவிகளுக்கு பாதுகாப்பும் இருக்காது என்று கருத்து உருவாகி விடாதா?

‘அப்பா’ என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின், மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா? கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளின் புகாரின் பேரில் விசாரணை நடத்தி நீதி பெற்றுத் தரவேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *