தூத்துக்குடி: தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் ‘புதுமைப்பெண்’ திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கி பேசியதாவது: காமராஜர் ஆட்சியில் அதிகப்படியான பள்ளிகள் திறக்கப்பட்டன. 1967-ல் அண்ணா நடத்திய அரசியல் புரட்சி, அடுத்து வந்த எல்லாவிதமான மாற்றங்களுக்கும் அடித்தளமாக அமைந்தது. அண்ணா மறைந்த பிறகு முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி, கல்லூரி கல்வியில் அதிகப்படியான கவனத்தை செலுத்தினார்.
தற்போது, கல்லூரி கல்வி, உயர்கல்வி, ஆராய்ச்சி கல்விக்கு திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி படிக்க ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 4.25 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். அவர்களுக்கு ரூ.590.66 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதை அரசுக்கு செலவினமாகக் கருதாமல், ஒரு தந்தைக்குரிய கடமையாக, பெண் குழந்தைகளுடைய கல்விக்கான மூலதனமாகப் பார்க்கிறேன். இந்த திட்டம் வந்த பிறகு மாணவிகள் கூடுதலாக கல்லூரிகளில் சேரத் தொடங்கி உள்ளனர். பெண்களின் படிப்புக்கு பணம் மட்டுமல்ல, எந்த தடை வந்தாலும் அதை உடைப்பேன். ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் 3.52 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு ரூ.143.41 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம். இத்திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க உள்ளோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தலைமைச் செயலர் முருகானந்தம், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஸ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், சமூகநலத் துறை செயலர் ஜெய முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.