அரசு உதவி பெறும் பள்ளிகளில் சம்பள பட்டுவாடா தாமதத்தை தவிர்க்க டிஜிட்டல் கையொப்பம் பயன்படுத்த கல்வி துறை முடிவு | Education Department to use digital signatures to avoid salary payment delays

1347480.jpg
Spread the love

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடாவில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, பள்ளி நிர்வாகிகளின் டிஜிட்டல் கையொப்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறையின்கீழ் 8,300-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பள பட்டியல் தயாரித்து, தாளாளர், செயலர், மேலாளர் கையொப்பமிட்டு மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அங்கு அனுமதி கிடைத்த பிறகு, தாளாளர் ஒப்புதலுடன், கருவூலத்துக்கு அனுப்பிய பின்னர் சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதனால், ஊதியம் கிடைப்பதில் தாமதம் நிலவுகிறது.

இதை தவிர்க்க, சம்பள பட்டியலில் பள்ளி நிர்வாகிகளிடம் டிஜிட்டல் முறையில் கையொப்பம் பெறும் வசதியை அமல்படுத்த வேண்டும் என்று அரசு உதவி பெறும் பள்ளி தாளாளர்கள் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அதில், டிஜிட்டல் முறையில் அரசின் களஞ்சியம் செயலி வழியாக சம்பள பட்டியல் தயாரிக்க முடிவானது.

இதையடுத்து, களஞ்சியம் செயலியில் பள்ளி நிர்வாகிகளின் கையொப்பத்தை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்து, அதன்மூலம் மாதம்தோறும் சம்பள ஒப்பளிப்பு வழங்கப்பட உள்ளது. அந்தந்த முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்கள் வாயிலாக இதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த புதிய நடைமுறை மார்ச் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே, இதற்கான நடைமுறைகள் குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் தெளிவுபடுத்துமாறு அனைத்து கல்வித் துறை அலுவலர்களுக்கும் கருவூலத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *