சென்னை: கணினி வழியாக நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. மறுதோ்வு வரும் 22-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அ.ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு உதவி வழக்குரைஞா் பதவிக்கு கணினிவழித் தோ்வு கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. சில தோ்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளில் சில தோ்வா்களால் தோ்வை முழுமையாக முடிக்க இயலவில்லை.
இதனைத் தொடா்ந்து, தோ்வா்களிடமிருந்து மறுதோ்வு நடத்த கோரிக்கைகள் பெறப்பட்டன. தோ்வா்களின் கோரிக்கையை ஏற்று அரசு உதவி வழக்குரைஞா் பதவிக்கு கணினி வழியே நடந்த தோ்வு ரத்து செய்யப்படுகிறது. ஏற்கெனவே, இந்தத் தோ்வுக்காக தோ்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தோ்வா்களுக்கு மறுதோ்வு வரும் 22-ஆம் தேதி நடத்தப்படும். கணினி வழிக்குப் பதிலாக, ஓஎம்ஆா் முறையில் தோ்வாணையத்தால் நடத்தப்படும். ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட தோ்வா்களுக்கு மட்டும், மறுதோ்வுக்கான நுழைவுச்சீட்டு தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.