அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை: தலைமைச் செயலாளர் எச்சரிக்கை | Government employees will not be paid if they not come to work Chief Secretary

1354965.jpg
Spread the love

சென்னை: அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை என்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் எச்சரித்துள்ளார். இதையடுத்து, அடுத்த கட்ட போராட்டங்களை அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்து வருகின்றன.

பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய முரண்பாடுகளை களைவது, அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவது, மீண்டும் ஈட்டிய விடுப்பு பலன் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்ட அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மற்றொரு கோரிக்கையான ஈட்டிய விடுப்புக்கு பணப்பலன் பெறும் திட்டம் அடுத்தாண்டு ஏப்.1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதற்கிடையே, மார்ச் 19-ம் தேதி (நேற்று) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அரசு ஊழியர்கள் மார்ச் 19-ம் தேதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், பணி செய்யாவிட்டால் சம்பளம் இல்லை என்ற அடிப்படையில் ஒருநாள் ஊதியத்தை பிடிக்க தலைமைச் செயலாளர் ந.முருகானந்தம் நேற்று முன்தினம் இரவு உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், அரசு ஊழியர்கள் யாரும் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவில்லை.

இந்த சூழலில், தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (போட்டோ- ஜியோ) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அமிர்தகுமார், பீட்டர் அந்தோணிசாமி உள்ளிட்ட மாநில ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு காலம் தாழ்த்தாமல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்பு சலுகையை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு நிர்ணயத்தில் வழங்க வேண்டிய 21 மாத கால நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியாகவுள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 3-ம் தேதி மாவட்ட அளவில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டமும், அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 25 -ம் தேதி மாநில அளவிலான முழுநேர தர்ணா போராட்டமும் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அமிர்தகுமார் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *