தமிழகத்தில் 14 லட்சமாக உள்ள அரசு கேபிள் இணைப்புகளை வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 25 லட்சம் இணைப்புகளாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓராண்டுக்குள் இணைப்புகளின் எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என அரசு கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் தொழிலாளர் வாரியத் தலைவர் ஜீவா தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் காவேரி சிறப்பு அங்காடியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசு கேபிள் அலுவலகத்தில், கேபிள் ஆபரேட்டர்களுக்கு, புதிய ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அரசு கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் தொழிலாளர் நல வாரியத் தலைவர் ஜீவா, அரசு கேபிள் டிவி பொது மேலாளர் ம.துரை, துணை மேலாளர் கவுதம், கேபிள் டிவி தனி வட்டாட்சியர் ரத்தினவேல் ஆகியோர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு புதிய ஹெச்டி செட்டாப் பாக்ஸ்களை வழங்கினர்.
பின்னர் வாரியத் தலைவர் ஜீவா செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் 50 லட்சம் ஹெச்டி செட்டாப் பாக்ஸ் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது 14 லட்சம் அரசு கேபிள் டிவி இணைப்புகள் உள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 25 லட்சம் இணைப்புகளாக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓராண்டுக்குள் அரசு கேபிள் டிவி இணைப்புகளை 50 லட்சமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களாக இருந்த பலர், ஹெச்டி செட்டாப் பாக்ஸ் இல்லாத சூழலில், அரசு கேபிளில் இருந்து வெளியேறி தனியார் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தொழில்நுட்ப மேம்பாடு செய்யப்பட்டு அரசு கேபிள் டிவி ஹெச்டி செட்டாப் பாக்ஸ்களை விநியோகம் செய்து வருகிறது. இதனால், அரசு கேபிளில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அரசு கேபிளை டிவியை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரி்வித்தார்.