அரசு கோரும் அவகாசத்தை ஏற்க டாஸ்மாக் தொழிற்சங்கம் மறுப்பு: திட்டமிட்டபடி போராட்டம் என அறிவிப்பு | Tasmac union refuses to accept time demanded by government

1349915.jpg
Spread the love

சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு கோரும் கால அவகாசத்தை ஏற்க முடியாது என்றும், திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் எனவும் டாஸ்மாக் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், விற்பனையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமை செயலகம் முன்பு பிப்.11-ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிப்.11-ம் தேதி நடைபெற இருக்கும் காத்திருப்பு போராட்டம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த டாஸ்மாக் சங்கங்களின் கூட்டமைப்புக்கு, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து, சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தைக்கு பிறகு, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளை மேலாண்மை இயக்குநர் விரிவாக எடுத்துரைத்தார். அரசு தரப்பில் இன்னும் சில அனுமதிகள் பெற வேண்டிய அவசியம் இருப்பதை எங்களுக்கு புரியவைத்தார். இவையெல்லாம் எங்களிடம் கூறிய அவர், எங்களது போராட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

எங்கள் கோரிக்கைகளுக்காக 22 ஆண்டுகளாக காத்திருந்தோம். பல அதிகாரிகளிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். இதற்கு மேலும், அரசு கோரும் கால அவகாசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும். போராட்டத்துக்கு முன்பு சுமூகமான முடிவு எட்டப்படுமானால், மேலாண்மை இயக்குநரின் கோரிக்கையை பரிசீலனை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *