அரசு பேருந்துகளில் திடீர் பயணக் கட்டண உயர்வு? – மதுரை மண்டல பயணிகள் அதிர்ச்சி! | ticket price hike in govt bus at kovilpatti

1352564.jpg
Spread the love

கோவில்பட்டி: அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல பேருந்துகளில் பயணக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் கோட்டமும், மதுரை மண்டலத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் கோட்டமும் உள்ளன. இந்த கோட்டங்களின் கீழ் பல்வேறு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. தினந்தோறும் மதுரை மண்டல போக்குவரத்துக் கழகம் மூலம் மதுரையில் இருந்து திருச் செந்தூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு இடையே மண்டேலா நகர், காரியாபட்டி, கல்குறிச்சி, பாளையம்பட்டி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, மேலக்கரந்தை முத்துலாபுரம், எட்டயபுரம், கீழஈரால், எப்போதும் வென்றான் குறுக்குச்சாலை, தூத்துக்குடி, ஸ்பிக்நகர், பழைய காயல், ஆத்தூர், முக்காணி, ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் என 20-க்கும் மேற்பட்ட நிறுத்தங்கள் உள்ளன.

இந்நிலையில், மதுரை மண்டலம் சார்பில் சுமார் 32 அரசு பேருந்துகள், திருநெல்வேலி மண்டலம் சார்பில் 60 அரசு பேருந்துகள், கோவை மண்டலம் சார்பில் சுமார் 9 அரசு பேருந்துகள் தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல் மறு மார்க்கமாக இதே வழித்தடத்தில் திருச்செந்தூரில் இருந்து மேலக்கரந்தை, அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த வழித்தடத்தில் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு ரூ.172 பயணக் கட்டணமும், தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு ரூ.133 பயணக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு இடைப்பட்ட நிறுத்தங்களின் பயணக் கட்டணம் கணிசமாக சத்தமில்லாமல் அறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் இருந்து ஆத்தூருக்கு 20 நாட்களுக்கு முன் ரூ.17 என இருந்த பயணக் கட்டணம் தற்போது ரூ.20 ஆகவும், ஆறுமுகநேரியில் இருந்து ஸ்பிக்நகருக்கு ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆகவும், ஆத்தூரில் இருந்து ஸ்பிக் நகருக்கு ரூ.15-ல் இருந்து ரூ.10 ஆகவும், தூத்துக்குடியில் இருந்து எப்போதும் வென்றானுக்கு ரூ.23-ல் இருந்து ரூ.30 ஆகவும், தூத்துக்குடியில் இருந்து எட்டயபுரம் வரை ரூ.41-ல் இருந்து ரூ.50 ஆகவும், மேலக்கரந்தையில் இருந்து மண்டேலா நகருக்கு ரூ.60-ல் இருந்து ரூ.65 ஆகவும், மேலக்கரந்தையில் இருந்து மாட்டுத்தாவணிக்கு ரூ.75-ல் இருந்து ரூ.80 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

இதுகுறித்து அயன்வடமலாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் அ.வரதராஜன் கூறுகையில், “தமிழக அரசு பேருந்து கட்டணம் உயர்த்தும் போது பொதுமக்களுக்கு முன்கூட்டி அறிவிப்பு செய்த பின் உயர்த்துவது வழக்கம். தற்போது 20 நாட்களுக்கு முன் மதுரை மண்டலம் முழுவதும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். பேருந்து கட்டண உயர்வை அரசு பரிசீலனை செய்து பழைய கட்டணத்தை பேருந்துகளில் வசூலிக்க வேண்டும்,” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *