அரசு போக்குவரத்து கழகம் எப்போதும் தனியார் மயம் ஆகாது: அமைச்சர் சிவசங்கர் உறுதி | T.N. Minister on Govt Buses

1285603.jpg
Spread the love

திருப்பத்தூர்: அரசு போக்குவரத்துக் கழகம் எப்போதும் தனியார் மயமாகாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 5 புதிய பேருந்துகள் தொடக்க விழா திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 5 புதிய பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: ”தமிழகதத்தில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை வாங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன்படி தமிழகத்தில் 7,200 புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டு அதில் முதல் கட்டமாக 1,000 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

ஆனால், சில எதிர்கட்சிகள் புதிய பேருந்து வரவில்லை என கூறுகின்றனர். அவர்களின் பார்வைக்காகவே இந்த விழா நடத்தப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக ஓட்டுநர், நடத்துநர்கள் நியமிக்கப்படவில்லை. ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி விட்டனர். சுமார் 2 ஆயிரம் வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தம் செய்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக் கழகம் கடுமையான நிதிச்சுமையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டது.

தற்போது திமுக ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகம் புத்துயிர் பெற்று வருகின்றன. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர்கள், நடத்துநர்களின் பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளது. மற்ற போக்குவரத்துக் கழகத்திலும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும். போக்குவரத்துத் துறையில் மகளிர் கட்டணமில்லா பயண திட்டம் மகத்தான திட்டம். இந்த திட்டம் மூலம் போக்குவரத்துத் துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது.

முதலில் இத்திட்டத்துக்கு ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.2,800 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த திட்டத்துக்கான நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்ததால் தான் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் மற்றும் நடத்துநர்களுக்கு 1-ம் தேதியே சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது போக்குவரத்து தனியார் மயமாக போகிறது என வதந்தி பரப்பி வரப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. தமிழகத்தில் 20 ஆயிரம் அரசு பேருந்துகள் இயங்குகிறது. இதில் 1 லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர். இதுபோல எந்த மாநிலத்திலும் கிடையாது.

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ஒய்வூதியம் வழங்கும் ஒரு சில மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது. எனவே போக்குவரத்துத் துறை எப்போதும் தனியார் மயம் ஆகாது. இதனை யாரும் நம்ப வேண்டும். தமிழகத்தில் விடுபட்ட வழித்தடங்களில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *