அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க கோரி போராட்டம் | Protest demanding appoint doctors and nurses according to the number of patients

1354988.jpg
Spread the love

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்கக்கோரி அரசு மருத்துவர்கள் சென்னையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு சார்பில் தர்ணா போராட்டம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் நேற்று நடைபெற்றது.

சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை தலைமையில் நடந்த போராட்டத்தில் கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யா மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமான அரசு மருத்துவர்கள் பங்கேற்றனர்.

அப்போது அரசு மருத்துவர்கள் கூறியதாவது: உயிரை காப்பாற்றும் மருத்துவர்கள் மகிழ்ச்சியாக பணி செய்திடவும், மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் உயிர் தியாகத்துக்கு மதிப்பளித்தும் அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யாவுக்கு அரசு வேலை உடனடியாக தரப்பட வேண்டும்‌. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

இளைய மருத்துவர்கள், முதுகலை மருத்துவ மாணவர்கள் உள்பட மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். அரசு மருத்துவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கோரிக்கைகளை, இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே முதல்வர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம். இல்லையென்றால், அடுத்த கட்டமாக, ஜூன் 11-ம் தேதி மேட்டூரில் இருந்து சென்னையை நோக்கி பாதயாத்திரை மேற் கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்வர் ‘அப்பா’வுக்கு கோரிக்கை: கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மகள் கீர்த்தனா கூறியதாவது: கரோனா காலத்தில் 2 மாதம் விடுமுறை எடுத்திருந்தால், எங்கள் அப்பா உயிரோடு இருந்திருப்பார். தமிழக மாணவ, மாணவிகள் வாய் நிறைய ‘அப்பா… அப்பா’ என அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைவதாக நம் முதல்வர் தெரிவிக்கிறார்.

எங்களுக்கு நிஜமாகவே அப்பா இல்லை. மக்கள் உயிரை காப்பாற்ற, நாங்கள் எங்க அப்பா உயிரை பறிகொடுத்து நிற்கிறோம். அம்மாவும், நாங்களும் ரொம்ப கஷ்டப்படுகிறோம். முதல்வர் அப்பா நிச்சயம், எங்க அம்மாவுக்கு அரசு வேலைக்கான ஆணையை தருவார் என நம்புகிறோம் என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *