அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.90.52 கோடியில் 150 புதிய பேருந்துகள்: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார் | 150 New Buses at a Cost of Rs.90.52 Crore for Govt Express Transport Corporation: Minister Udhayanidhi Stalin Inaugurates

1302140.jpg
Spread the love

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.90.52 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக ரூ.90.52 கோடி மதிப்பிலான 150 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டுக்கு வரப்பெற்றன.

இவற்றை சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேருந்தில் ஏறி பார்வையிட்டு ஆய்வும் செய்தார்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், மு.சண்முகம், சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன், மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குநர் செ.நடராஜன், தொமுச பேரவை பொருளாளர் கி.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேருந்துகளில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: “புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பயணிகளின் சொகுசு பயணத்துக்காக முன்புற ஏர் சஸ்பென்சன் (Air Suspension) வசதி செய்யப்பட்டுள்ளது. முதியோர், குழந்தைகளின் வசதிக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதிகள் அமைக்கப் பட்டுள்ளன. படுக்கைகளுக்கு இடையே அதிகமான இட வசதியும், தடுப்பும் உள்ளன.

ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக சார்ஜிங் போர்ட், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி (SOS) அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ஒலி பெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகளை வைக்கவும், சரக்கு பார்சலுக்காகவும் போதிய இட வசதி உள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் புதிய பேருந்துகளின் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ஜின் தீயை முன் கூட்டியே திறம்பட அனுமானித்து அணைக்கும் வகையில் எஃப்டிஎஸ்எஸ் (FDSS)கருவி பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் கடிகராம் போன்றவையும் இடம்பெற்றுள்ளன” என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *