மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி மாநில முதல்அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந் தேதி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது நீதிமன்ற காவல் வருகிற 7 ந் தேதியுடன் முடிகிறது.
மனுமீதான விசாரணை
இதற்கிடையே அமலாக்கத் துறை தன்னை கைது செய்ததற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுமீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அடங்கிய அமர்வு முன்பு இந்த மனுமீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, பாராளுமன்ற தேர்தல் நேரம் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினால் என்ன மாதிரியான நிபந்தனை விதிக்கலாம் என்பது தொடர்பாக விரிவான விவாதத்திற்கு தயாராக வாருங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு வருகிற 7 ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது அமலாக்கத்துறையின் வாதம் தொடரும்.
இடைகால ஜாமீன்
வழக்கு விசாரணையின் போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைகால ஜாமீன் வழங்க கூடுதல் சொலிசிட்டர் ராஜு எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், “நாங்கள் இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து விசாரிப்போம் என்று கூறினோம். இடைக்கால ஜாமீன் வழங்குவோம் என்று கூறவில்லை. இடைக்கால ஜாமீன் வழங்கலாம், வழங்காமலும் இருக்கலாம்” என்று தெரிவித்தனர்.
எனவே 7ந்தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது அன்றைய தினம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்து விடும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.