தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று ராஜிநாமா செய்வதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவுடன் ஆலோசித்து அடுத்த முதல்வர் யாரென்ற அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இன்று முதல்வர் அரசியல் விவகாரக் குழு (பிஏசி) கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதில் அனைத்து கேபினட் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள். புதிய முதல்வர் குறித்து அனைவரிடமும் விவாதிக்கப்பட்டு, கட்சியின் சட்டப்பேரவைக் கூட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படும்” என்று ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் கூறினார்.
கேஜரிவால் மனைவி சுனிதா, அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய் மற்றும் கைலாஷ் கலோத் ஆகியோரின் பெயர்கள் அடுத்த முதல்வருக்கானத் தேர்வுப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல்வா் பதவி: அக்னிப் பரீட்சைக்குத் தயாராகும் கேஜரிவால்!
தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வா் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. திகாா் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவால், 48 மணி நேரத்திற்குள் தனது பதவியை ராஜிநாமா செய்வதாகவும், தில்லியில் முன்கூட்டியே சட்டப் பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமை கூறினார் .
கேஜரிவால் ஊழல் கறைகளைத் துடைக்க அரசியல் நாடகம் – தேவேந்தா் யாதவ் விமா்சனம்
இந்த நிலையில் ஆளுநர் வி கே சக்சேனாவை இன்று மாலை 4.30 மணியளவில் சந்திக்கும் அரவிந்த் கேஜரிவால் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்குவார் என்று தெரிகிறது.
அதற்கு முன்னதாக இன்று மதியம் நடக்கவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவுடனான சந்திப்பில் அடுத்த முதல்வரைத் தேர்வு செய்து அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.