அரியலூர்: அரியலூர் ரயில் நிலைய முதலாவது நடைமேடையில், விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில், இன்று காலை 7.30 மணியளவில் அரியலூரில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் திருச்சி நோக்கி புறப்பட்டது.
அப்போது, ஓர் இளம்பெண்கள் ஓடி வந்து ரயிலில் ஏற முயன்றுள்ளனர். அப்போது, ஒருவர் ரயிலில் ஏறிய நிலையில், மற்றொரு இளம்பெண் ரயிலின் படியில் காலை வைத்து படியின் பக்கவாட்டில் உள்ள கம்பியை பிடித்துள்ளார். மழை காரணமாக படி ஈரமாக இருந்ததால் சற்று சறுக்கிய நிலையில், ரயிலில் இருந்து விழ இருந்த இளம்பெண்னை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே தலைமை காவலர் செந்தில்குமார் தாங்கி பிடித்து ரயில் பெட்டிக்குள் தூக்கிவிட்டார்.
இதனை கண்ட ஓட்டுநர்கள் ரயிலை உடனடியாக நிறுத்தினர். மேலும், தவறி விழுந்த இளம்பெண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்ததும் ரயில் மீண்டும் திருச்சி நோக்கி புறப்பட்டு சென்றது. ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை சாதுரியமாக செயல்பட்டு பத்திரமாக மீட்ட காவலர் செந்தில் குமாரை சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்த சிசிடிவி பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.