“அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை நீக்காவிட்டால் 2026 தேர்தலில் திமுக எதிர்வினையை சந்திக்கும்” – கிருஷ்ணசாமி | Krishnasamy warn dmk government to remove subclass reservation

1330097.jpg
Spread the love

மதுரை: “தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்டுள்ள அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை நீக்காவிட்டால், 2026 தேர்தலில் திமுக கண்டிப்பாக எதிர்வினையை சந்திக்கும்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதிய தமிழகம் கட்சி சார்பில் நவ.7-ல் 6 அம்ச கோரிக்கை குறித்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும். தமிழகம் சமூக நீதியின் தாயகம் என்று சொல்கிறார்கள். இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு நீதிக்கட்சி காலத்திலிருந்து இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டில் பட்டியலின மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் திமுக ஆட்சியில் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இது மிகப்பெரியளவிலான சமூக அநீதியாகும். இதுபோன்ற அநீதி இந்தியாவில் எங்கும் இல்லை. தமிழகத்தில் மற்ற சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு தான் வழங்கப்பட்டுள்ளது. உள்ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால் பட்டியலினத்தில் உள்ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அருந்ததியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு 18 சதவீதம் அப்படியே இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் கூட தனி இடஒதுக்கீடு வழங்கவே கூறியுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்குமாறு கூறவில்லை. ஆனால் திமுக அரசு உள் ஒதுக்கீட்டில் குறியாக உள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டால் பட்டியலின மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூட தெரியாமல் போனது வியப்பாக உள்ளது.

உள் இடஒதுக்கீட்டை சரி செய்யாவிட்டால் 2026 தேர்தலில் அதற்கான எதிர்வினையை திமுக அரசு கண்டிப்பாக சந்திக்கும். இது தவிர தென் தமிழகத்தில் தொழிற்சாலைகள் வர வேண்டும். மதுவிலக்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படுகிறது. முதல்வர் பதவி ஆசை திருமாவளவனுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் தான் உள்ளது. முதல்வராக ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் திமுக கூட்டணியில் இருந்து முதல்வர் கனவு காணக்கூடாது. அது பகல் கனவாகவே இருக்கும். திமுக கூட்டணியிலிருந்து முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது தவறாக புரிந்து கொள்ளப்படும். திமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்து முதல்வர் ஆகும் முயற்சியை திருமாவளவன் மேற்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *