ஏழாண்டு சிறைவாசத்திற்கு பிறகு, சதி வழக்கில் இருந்து மீண்டுவந்தார் நல்லகண்ணு. ரஞ்சிதம் அம்மாள் மனதோடு இணைந்த வாழ்க்கைத் துணைவியானார். திருமணத்துக்குப் பிறகும் அவரின் போராட்ட வாழ்க்கை தொடர்ந்தது. எளிமையும் தூய்மையுமே தன் அடையாளமாகக் கொண்ட இந்த அரிய அரசியல்வாதி 1992 முதல் 2005 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
மண்ணின் மீதும் மனிதர்கள் மீதும் பெருநேசம் கொண்ட இந்த மாமனிதர், கடனாநதியில் அணை கட்டுவதற்காக தன் உயிரை முன்வைத்து நடத்திய போராட்டம் பல்லாயிரம் விவசாயிகளின் வாழ்க்கையைப் பசுமையாக்கியது. தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக அவரே ஆஜராகி வைத்த வாதங்கள், நீதிமன்றத்தை அதிர வைத்தன.
நியாயம் உணர்ந்து உடனே மணல் அள்ள தடை விதித்தது நீதிமன்றம். அதிகார வேட்கையோ, பணத் தேவையோ, புகழ் போதையோ இல்லாத இந்த மகத்தான மனிதருக்காக ஒரு கோடி ரூபாயை அன்போடு அளித்தார்கள் தோழர்கள். அடுத்த நொடியே கட்சிக்காக அதை திருப்பியளித்து திகைப்பூட்டிய பண்பாளர். அம்பேத்கர் விருதுக்காக தமிழக அரசு தந்த லட்ச ரூபாயையும் பாதியை கட்சிக்கும் மீதியை விவசாய தொழிலாளர் சங்கத்திற்கும் பகிர்ந்தளித்தார்.

தகைசால் தமிழர் விருதோடு தந்த பத்து லட்சத்தோடு, தன் பையிலிருந்த ஐயாயிரத்தையும் சேர்த்து முதல்வர் நிவாரண நிதிக்தே திருப்பி அளித்தார். இத்தனையாண்டு அரசியல் வாழ்க்கையில் சொந்த வீடு கூட இல்லாத நேர்மையாளர். அரசியலை வெறுப்புடன் அணுகும் இன்றைய தலைமுறைக்கான நம்பிக்கைச்சுடர். கொள்கை வேறுபாடுகளைக் கடந்து மக்களாலும் மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படுகிற மாபெரும் தலைவர்.
சாதாரண வெள்ளைச் சட்டை, வேட்டி-துண்டு, ரப்பர் செருப்பு, வியர்த்துக் களைத்த உருவம் தான் பெருந்தமிழரின் வெளி அடையாளம். ஆனால் இவரின் வாழ்க்கையோ நம் எல்லோருக்குமான நம்பிக்கை வெளிச்சம்.
கண்ணியமான சமூகச் செயல்பாடுகளாலும் ஓய்வறியாத மக்கள் தொண்டாலும் தமிழ் மக்களின் மதிப்பையும் மரியாதையையும் சொத்தாகச் சேர்த்திருக்கும் இந்தத் தோழர், நமக்கான பெருமிதத் தமிழர்.