பெங்களூரு மாநகரில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு மாநகரில் 21 வயதான இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சனிக்கிழமையன்று(ஆக. 17) இரவு விருந்தில் பங்கேற்றுவிட்டு, நள்ளிரவு 1 மணியளவில் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சாலையில் தனியாக நடந்து சென்ற அந்த பெண்ணிடம், அவ்வழியாக பைக்கில் சென்ற நபர் ஒருவர், ‘இருட்டில் தனியாகச் செல்ல வேண்டாம், தன் பைக்கிலேயே அவரை வீட்டில் இறக்கிவிடுவதாகத்’ தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி அந்த நபருடன் பைக்கில் ஏறிச் சென்ற மாணவியை அவரது வீட்டில் இறக்கிவிடாமல், ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார் அந்த நபர்.
தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சியில், அந்த நபரை இளம்பெண் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த நபர் இளம்பெண்ணின் ஆடைகளை ஆத்திரத்தில் கிழித்து வீசிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்பவம் நிகழ்ந்த இடத்தில்(ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட் பகுதி – ஒசூர் சர்வீஸ் சாலை அருகே) நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியின் பின்னால் நின்றுகொண்டு, அந்த கல்லூரி மாணவி உதவிகேட்டு கூக்குரலிட்டுள்ளார்.
இதனிடையே தனது ஸ்மார்ட்போனிலிருந்து அந்த பெண், தனது நண்பர்களுக்கு அவசரகால குறுஞ்செய்தி மூலம் தகவல் அளித்து உதவி கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் அலைபேசியில் காண்பிக்கப்பட்ட இருப்பிடத்தை தங்களது ஸ்மார்ட்போன் மூலம் அவரது நண்பர்கள் கண்டுபிடித்து மாணவியை தேடிச் சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகே, ஒரு ஆண் அரை நிர்வாண கோலத்தில் நிற்பதைக் கண்ட அவரது நண்பர்கள், அந்த நபரை பிடிக்க முற்பட்டுள்ளதாகவும், ஆனால் சுதாரித்துக்கொண்ட அந்த நபர் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியின் நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் குற்றவாளியைக் கண்டுபிடிப்போம் என்று பெங்களூரு கிழக்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையர் ராமன் குப்தா தெரிவித்துள்ளார்.