தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது,
“மக்களை நேசிக்கும் ஒரு நல்ல தலைமை இல்லாததால் இத்தனை ஆண்டுகளாக வேறு வலியில்லாமல் ஸ்டாலின் சார் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்களுக்கு சரியான நேரத்தில் ஒரு வெகுஜன மக்கள் இயக்கமாக வந்ததுதான் நம்முடைய தவெக.
நாம் ஒவ்வொரு வீட்டில் உயிராக உணர்வாக இருக்கிறோம். ஒவ்வொரு ஊராகச் சென்று உங்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் நமக்கு எதிராக நடைபெறும் சூழ்ச்சிகள் பற்றி உங்கள் எல்லாருக்கும் தெரியும். அதனால் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன்.
நம்முடைய ஆட்சி அமைந்ததும் நான் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக வந்து என்னுடைய சொந்தங்களை எல்லாம் சந்திப்பேன்.வரும் தேர்தல் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல். தமிழ்நாட்டுக்கும் டில்லிக்கும் தான் தேர்தல் என்றும் தமிழ்நாட்டுக்கும் என்டிஏ-க்கும்தான் தேர்தல் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இதென்ன நாடாளுமன்றத் தேர்தலா? பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறாரா?
தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியும். தமிழ்நாட்டு மக்கள் மிகத் தெளிவான சூப்பர் மக்கள். உண்மையில் இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கிற போர். சரியான நிர்வாகம் செய்யாத திமுக அரசுக்கும் தவெகவுக்கும் இடையே நடக்கிற போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு ‘
தூயசக்தி தவெகவுக்கும் தீயசக்தி திமுகவுக்கும் இடையே நடக்கிற போர். ஸ்டாலின் சார் ஆட்சியில்தான் திமுக சூப்பர்ஸ்டார் மாநிலமாக இருக்கிறது என்று சொல்கிறார். காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆட்சியில் தமிழ்நாடு சூப்பர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது சூப்பர் ஸ்டாண்ட்அப் காமெடி செய்பவரின் மாநிலமாக மாறியுள்ளது. மக்களே, உங்களுக்காக தடைகள், சூழ்ச்சிகள் அனைத்தையும் கடந்து 2026 தேர்தலில் தவெக தில்லாக நிற்கும்.
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நடக்கிற தேர்தல் அல்ல. 50 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் மாதிரி. இது அதிசய தேர்தல். ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் அவர்களுடைய எதிரிகளைத்தான் எதிர்ப்பார்கள். ஆனால், இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து என்னை எதிர்க்கிறார்கள்.
எனக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்துள்ளார். அது முதல்வர் ஸ்டாலின் தான். ஒரு செய்தியாளர் சந்திப்பில், ‘எனக்கு யாரும் எதிரி கிடையாது’ என முதல்வர் கூறியிருந்தார். அப்படியென்றால், கரூர் விஷயத்தில் என் மேல் ஏன் பழி சுமத்தினீர்கள்.
உங்கள் உண்மையான நண்பர் லஞ்சம் , ஊழல் தான். அரசியலுக்கு வருவதற்கு முன்பு உங்கள் சொத்து மதிப்பு என்ன? அரசியலுக்கு வந்த பிறகு உங்கள் சொத்து மதிப்பு என்ன? தமிழகத்துக்கு தேவையில்லாத ஆட்சி திமுக. அறிவாலயம் பக்கம் யாரவது நடந்து போனால் கூட, ஏன் நிழலுக்கு ஒதுங்கினால் கூட கூட்டணிக்கு சேர்த்துக் கொள்கிறார்கள். திமுக கூட்டணிக்கு நான் ‘கல்லாப்பெட்டி கூட்டணி’ என பெயர் வைத்துள்ளேன்.
ஏனென்றால் விஜய், லஞ்சம், ஊழலை எதிர்க்கிறான், மக்களோடு மக்களாக நிற்கிறான். மக்கள் விஜய்யுடன் இருக்கிறார்கள். அந்த வெறுப்பில்தான் என்னை எதிர்க்கிறார்கள். ஆனால் வரும் தேர்தலில் திமுகவும் தவெகவுக்கும்தான் போட்டியே.
வழக்கமாக தேர்தலில் நீங்கள் சென்று ஓட்டு போடுவீர்கள். அவ்வளவுதான். ஆனால் இந்த தேர்தலில் நீங்கள் பங்கெடுத்துக்கொள்ள போகிறீர்கள். உங்கள் வீட்டில் ஒருவர்தான் வேட்பாளர்” இவ்வாறு அவர் பேசினார். .
