30 ஆண்டுகளாகச் மிதிவண்டியிலேயே செய்தி பரப்பும் ‘தீக்கதிர்’ செல்வம் போன்ற உழைப்பாளிகள், இந்த அங்கீகாரத்தால் அடையும் மகிழ்ச்சி அளவிடற்கரியது. கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களிலும், மரம் விழுந்த சாலைகளைக் கடந்து செய்தித்தாள்களைச் சேர்த்த அந்த மனிதர்களிடம், “ஏன் இவ்வளவு தாமதம்?” என்று கேட்ட சமூகத்தின் மத்தியில், இந்தப் பாராட்டு விழாக்கள் ஒரு பெரும் மாற்றத்திற்கான தொடக்கம்.
எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டது போல, “ஏழரை மணிக்கு முகூர்த்தத்தை வைத்துக்கொண்டு, ஆறரை மணிவரை பேப்பர் போட்டுவிட்டு வந்து தாலி கட்டிய மணமகன்களும் உண்டு., பேப்பர் போட வேண்டும் என்பதால் இறந்த தகப்பனை அன்றே எரியூட்டிய மகன்களும் உண்டு..” என்று கடமையாற்றும் மனிதர்கள் இந்தத் தொழிலில் உண்டு. இவர்களின் தியாகத்திற்கு நாம் செய்யும் ஆகச்சிறந்த மரியாதை, அவர்களை இன்முகத்துடன் “பெயர் சொல்லி” அழைப்பதே.
துப்புரவுப் பணியாளர்களுக்கு மகளிர் தினத்தில் பாராட்டு விழா எடுப்பது, பெண் தபால்காரர்களை நேரில் சென்று வாழ்த்துவது எனப் புதுக்கோட்டை வாசகர் பேரவையின் ஒவ்வொரு செயலும் சிறப்பு.
உலகச் செய்திகளை விடியலில் சுமந்து வரும் அறிவுத் தூதுவர்களுக்கு, அங்கீகார மகுடம் சூட்டிய புதுக்கோட்டை வாசகர் பேரவையின் செயல் உன்னதமானது.
கடும் பனி, பெருமழை, சுழன்றடிக்கும் புயல் – என எதற்கும் அஞ்சாமல் உழைக்கும் அந்த நிசப்த நாயகர்களை, தேடிச் சென்று தேற்றுகிறார்கள்; பொன்னாடை போர்த்திப் போற்றுகிறார்கள்.
‘ஏய் பேப்பர்’ என்ற விளிப்பை மாற்றி, அவர்களுக்கு ஒரு பெயரும், பெருமையும் உண்டு என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லிய உங்கள் மனிதாபிமானம்…வாசிக்கப்பட வேண்டிய ஆகச்சிறந்த வரலாறு.
தபால்காரர்கள் முதல் துப்புரவுப் பணியாளர்கள் வரை எளியவர்களின் உழைப்பில் இருக்கும் உயிர்ப்பைக் கண்டுகொண்ட புதுக்கோட்டை வாசகர் பேரவையின் சமூகப் பார்வைக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
நாமும் செய்வோம்- நாளை காலை பேப்பர் போடும் தம்பியையோ, அண்ணனையோ பார்த்தால் ஒரு கணம் நிறுத்தி அவர் பெயரைத் தெரிந்துகொள்வோம். அந்த ஒரு சொல், அவர்களின் அன்றைய நாள் உழைப்பின் சோர்வை நீக்கும் மருந்தாக அமையும்.
*****
பழ.அசோக்குமார்
புதுக்கோட்டை