-
உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதில்தான் உண்மையான மெய்யறிவு உள்ளது.
சாக்ரடீஸ், பெருவாரியான மக்கள் சாதாரணமாக நினைத்த விஷயங்களைக் கூடக் கேள்வி கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தியவர். ஒருவர், ஒரு விஷயத்தைப் பற்றித் தனக்கு முழுமையாகத் தெரியும் என்று கருதினால் “எல்லாம் எனக்குத் தெரியும்” என்ற மனநிலையில், அதைப் பற்றியப் புதிய கண்ணோட்டங்களை செவி மடுக்க மாட்டார். மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு அளிக்க மாட்டார். “எல்லாம் எனக்குத் தெரியும்” என்ற மன நிலை, புதிய சிந்தனைக்கு தடை விதிக்கும். நிச்சலமான மனதுடன் எந்த விஷயத்தையும் அணுகுவதே சாலச் சிறந்தது.
2. செல்வத்தை விட அறிவை விரும்புங்கள். ஏனென்றால் ஒன்று நிலையற்றது. மற்றது நிரந்தரமானது.
செல்வம் நிலையற்றது. அழியும் தன்மையுடையது. சம்பாதித்த செல்வம் செலவழிக்கும் நிலையில் குறையும். ஆனால், அறிவு நிலையானது. மற்றவர்களுடன் உங்கள் அறிவுச் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது அது குறைவதில்லை. மாறாக மற்றவர்களின் கருத்துக்களால் அறிவு மேம்படுகிறது. தன்னுடைய செல்வ நிலையில் மன நிறைவு கொள்கின்ற செல்வந்தர், புதியதாக எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வமில்லாதவராக இருப்பார்.
ஆனால், அறிவை வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றாக கருதும் நபர், அவருடைய நிதி நிலைமையை பொருட்படுத்தாமல், மேலும் கற்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார். ஒருவனுடைய செல்வம் பரம்பரைச் சொத்தாக இருக்கலாம். ஆனால், அறிவு பரம்பரைச் சொத்தல்ல. அறிவு இடை விடாத முயற்சியின் மூலம் பெறப்பட்டது. ஆகவே, நிரந்தரமான அறிவைப் போற்ற வேண்டும்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
ஒருவனுக்கு கல்வியே உயர்ந்த செல்வம். மற்ற செல்வங்கள் நிலையானவை அல்ல. (திருக்குறள்)