அற்ப காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் போராடக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை | Lawyers should not Protest over Trivial Reasons: HC Advises

1372727
Spread the love

மதுரை: அற்ப காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தக் கூடாது என அறிவுறுத்தி, கோவில்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கோவில்பட்டியில் ஆகஸ்ட் 1-ல் வழக்கறிஞர் புருசோத்தமன் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர் ராமகிருஷ்ணன் இடையே தகராறு நடைபெற்றது. சாலையில் வழிவிடாமல் சென்றது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பு மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆக.5 முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த செயல் வழக்கறிஞர்களின் உரிமை மற்றும் நீதி பரிபாலன முறையை பாதிக்கச் செய்கிறது. எனவே வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சுப்பிரமணியம், அருள் முருகன் அமர்வு விசாரித்து, அற்ப காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளன. வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் ஏற்புடையதல்ல என தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் அமைப்பும் தெரிவித்துள்ளது.

இப்போராட்டம் மனுதாரர்களை மிகவும் பாதிக்கும். நீதித்துறையில் நீதி வழங்குவது பாதிக்கப்படும். நீதித்துறையின் மேன்மையை வழக்கறிஞர்கள் பாதுகாக்க வேண்டும். இதனால் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனு குறித்து கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க செயலாளர், தமிழ்நாடு- புதுச்சேரி பார் உறுப்பினர் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *