பட மூலாதாரம், Getty
இ-சிகரெட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுகள் வழமையான புகையிலை சிகரெட்டுக்களை புகைக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கான மாற்றுவழி என்று விளம்பரப்படுத்தப்படுவதை நிறுத்தக்கூடிய கட்டுப்பாடுகளை உருவாக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கோரியுள்ளது.
மேலும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் இந்த இ-சிகரெட்டுக்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கோரியுள்ளது. காரணம் இந்த மின்னணு சிகரெட்டுக்களை புகைப்பவர்கள் புகைத்த பிறகு வெளிவிடும் புகை அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கு என்னவகையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது குறித்து இன்னமும் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
புகையிலை சிகரெட்டுக்களைவிட இ-சிகரெட்டுக்கள் நல்லதா?
இ-சிகரெட்டுக்களை புகைப்பவர்கள் உள்ளிழுக்கும் நிக்கோட்டினின் அளவு என்பது சாதாரண புகையிலை சிகரெட்டுக்களில் இருப்பதை விட பெருமளவு குறைவு என்பதாலும், இ-சிகரெட்டுக்களை புகைப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என்பதாலும் சாதாரண வகை சிகரெட்டுக்களைவிட இ-சிகரெட்டுக்களால் ஏற்படும் பாதிப்பு பெருமளவு குறைவு என்றும் ஒரு தொகுதி மருத்துவ விஞ்ஞானிகள் வாதாடுகிறார்கள்.
இ-சிகரெட்டுக்கள் தொடர்பாக செய்யப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளும் வழமையான சிகரெட்டுக்களைவிட இ-சிகரெட்டுக்களால் ஏற்படும் பாதிப்புக்களின் அளவு எல்லா அளவுகோள்களின் கீழும் கணிசமான அளவுக்கு குறைவாக இருப்பதாகவே தெரிவித்திருக்கின்றன.
ஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் முழுமையானவை அல்ல என்று கூறும் வேறு சில மருத்துவ விஞ்ஞானிகளோ இ-சிகரெட்டுக்களின் நன்மை தீமைகள் இன்னமும் முழுமையாக ஆராயப்படவில்லை என்பதால் புகையிலை சிகரெட்டுக்களுக்கு மாற்றாக இ-சிகரெட்டுக்களை ஊக்குவிப்பது சரியான அணுகுமுறையல்ல என்று வாதாடுகிறார்கள்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகையிலை பெருவர்த்தக நிறுவனங்கள் தற்போது இந்த இ-சிகரெட்டுக்களை தயாரிக்கும் துறையில் நுழைந்து வேகமாக வளர்ந்துவருவதாக தெரிவித்திருக்கும் உலக சுகாதார நிறுவனம், இதன்மூலம் வழமையான தங்களில் புகையிலை சிகரெட்டுக்களின் பயன்பாட்டையும் அவற்றின் விற்பனையையும் ஊக்குவிக்க இந்த புகையிலை பெருநிறுவனங்கள் முயலும் என்றும் கவலை வெளியிட்டிருக்கிறது.
கடந்த ஒரு ஆண்டு மட்டும் உலக அளவில் சுமார் 300 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இ சிகரெட்டுக்கள் விற்பனை நடந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது.
இ-சிகரெட்டுக்கள் என்றால் என்ன?
பட மூலாதாரம், AP
இ-சிகரெட்டுக்கள் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுக்கள் பொதுவாக இரண்டு பகுதிகளைக்கொண்டிருக்கும். அதில் ஒரு பகுதியில் திரவ வடிவ நிகோடின் இருக்கும். மற்ற பகுதியில் பேட்டரியும், திரவ வடிவ நிக்கோட்டினை சூடாக்கும் சின்ன கம்பியும் இருக்கும்.
இந்த பேட்டரியின் துணைகொண்டு கம்பி மூலம் இ-சிகரெட்டில் இருக்கும் திரவ நிக்கோட்டினை சூடாக்கி அதில் வரும் ஆவியை இந்த இ-சிகரெட் புகைப்பவர் உள்ளிழுத்து வெளியில் விடுவார்.
இதில் சில இ-சிகரெட்டுக்களை வாயில் வைத்து இழுத்தாலே அதில் இருக்கும் பேட்டரி தானாகவே செயற்பட்டு நிக்கோட்டின் திரவத்தை சூடாக்கி அதன் ஆவியை புகைப்பவரின் தொண்டைக்குள் அனுப்பும். சில இ-சிகரெட்டுக்களில் அதில் இருக்கும் பேட்டரிக்கான சின்னஞ்சிறு பட்டனை அழுத்தினால் மட்டுமே அந்த இ-சிகரெட் செயற்படத்துவங்கும்.
இவை தவிர, இந்த திரவ நிக்கோட்டினில் பலவகையான சுவைகளையும், வசீகரிக்கும் மணத்தையும் கூட இந்த இ-சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து தத்தம் இ-சிகரெட்டுக்கள் தான் தனித்தன்மை வாய்ந்தவை என்று விளம்பரப்படுத்தும். வாடிக்கையாளர்களை வசீகரிக்கும்.
இன்னும் சில இ-சிகரெட்டுக்களில் உண்மையான சிகரெட்டின் முனையில் இருக்கும் நெருப்பு கங்கு கனன்றுகொண்டிருப்பது போன்ற தோற்றமும், புகை வெளியேறுவதைப்போல வெண்ணிற நீராவி வரும் வசதியும் கூட செய்யப்பட்டிருக்கும்.