தமிழக அரசு, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) சார்பில் அழிந்து வரக்கூடிய நிலையில் உள்ள பழமையான பாரம்பரிய கலை மற்றும் கலைப்பொருட்களை மீட்டெடுக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, ஊக்கப்படுத்தி வருகிறது.
தஞ்சாவூரின் பழமையான பாரம்பரிய கலைகளில் ஒன்று பொய்க்கால் குதிரை நடனம். பொய்க்கால் குதிரை நடனம் ஆடும் பல குடும்பங்கள் தஞ்சாவூரில் இருந்தனர்.
அவர்கள் உலகின் பல நாடுகளுக்கு சென்று பொய்க்கால் குதிரை நடன நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். ஆனால் இன்று சிலர் மட்டுமே பொய்க்கால் குதிரை நடனம் ஆடுகின்றனர்.

அத்துடன் பொய்க்கால் குதிரை செய்பவர்களும் சிலர் மட்டுமே உள்ளனர். இப்படியே போனால் பொய்க்கால் குதிரை நடனம் அழிந்து போகும். வரும் தலைமுறையினருக்கும் இப்படி ஒரு கலை இருந்தே தெரியாமல் போகும் நிலை ஏற்படும்.
இதை அறிந்த தமிழக அரசு, பொய்க்கால் குதிரை நடனம் அழியாமல் காக்கவும், இளம் தலைமுறையினருக்கு அக்கலையை கொண்டு சேர்க்கவும் அக்கறையுடன் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் பூம்புகார் விற்பனை நிலையத்தில் பொய்க்கால் குதிரை செயல் திறன் பயிற்சி மற்றும் பொய்க்கால் குதிரை நடனப் பயிற்சி அளிக்கப்பட்டது.