சென்னை: தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையை மத்திய இணையமைச்சர் உள்ளிட்டோர் விமர்சித்துள்ளனர்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தமிழில் புதிது புதிதாக பெயர் வைத்து, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி காலத்தை ஓட்டி வரும் திமுக அரசின் அடுத்த வெளியீடாகவே இந்த மாநில கல்விக் கொள்கை இருக்கிறது. ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டு, இவர்கள் தமிழில் வெளியிட்டுள்ள மாநில கல்விக் கொள்கையே புரியவில்லை.
இருமொழிக் கொள்கை செயல் படுத்தப்படும் என்றால் தனியார் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை கூறியபடி மூன்றாவது மொழி இருப்பதை திமுக அரசு ஏற்றுக் கொள்கிறதா, இதற்கு பெயர் தான் திமுகவின் சமூக நீதியா, தாய்மொழி வழிக்கல்வியைத் தானே தேசிய கல்விக் கொள்கையும் வலியுறுத்துகிறது.
தமிழகப் பள்ளி மாணவர்கள் எண்களை அடையாளம் காணக்கூட சிரமப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறதே, அரசு பள்ளிகளில் தரமில்லை எனக்கூறி, கூலித் தொழிலாளி கூட தனது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது ஏன், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு பங்கு நிதியை வழங்கிய பிறகும், தமிழக அரசு அதைச் செலுத்தாத காரணத்தால் தனியார் பள்ளிகள் கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோரை நிர்பந்திப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தேசிய கல்விக் கொள்கையை வெட்டி வீராப்புக்காக எதிர்த்துவிட்டு, பின் மாணவர் நலனில் அக்கறை கொண்டது போல மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதாக மக்களின் வரிப்பணத்தை வீணடித்து மாணவர்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளது.
மும்மொழிக் கொள்கைக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவை பார்த்து பயந்து, அவசரகதியில் தேசிய கல்விக் கொள்கையை பிரதி எடுத்து மாநிலக் கல்விக் கொள்கையாக திமுக அரசு வெளியிட்டிருக்கிறது. அதேநேரம், தேசிய கல்விக் கொள்கையின் பல முக்கிய அம்சங்களை இடம்பெறச் செய்யாதது மத்திய அரசு மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.
விசிக கோரிக்கை
விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி.: மாநிலக் கல்விக் கொள்கையில் பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்தது தவறான முடிவு. இது உயர் கல்வியின் தரத்தையும், தொழிற்கல்வியின் தரத்தையும் கெடுத்துவிடும். இந்த முடிவை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.