அவதூறு வழக்கில் பேரவைத் தலைவருக்கு சம்மன்!

Dinamani2f2024 062f508a30e1 57e0 49ff 9a2c 980c7d460e822fappavu.jpg
Spread the love

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், செப்.9 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அப்பாவு-க்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காமராஜா் சாலையில் உள்ள திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கத்தில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற தனியாா் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களின் அடுத்த கட்ட அரசியல் நகா்வு என்ன என்று தெரியாமல் இருந்ததாகவும், 40-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொள்ள விரும்புவதாகவும், அந்தக் கருத்தை அன்றைய எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலினிடம் கூறிய போது, அதற்கு ஸ்டாலின் மறுப்பு தெரிவித்ததாகவும் பேசியிருந்தாா்.

இது அதிமுகவுக்கும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிற விதமாக அமைந்திருப்பதாகக் கூறி, அதிமுக செய்தித் தொடா்பாளரும், வழக்குரைஞா் பிரிவு மாநில இணை செயலருமான பாபு முருகவேல், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி எழும்பூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடா்ந்தாா்.

ஆனால், அந்த வழக்கு அங்கு கோப்புக்கு எடுக்கப்படாத நிலையில் அதன் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கும் கோப்புக்கு எடுக்கப்படாத நிலையில், சென்னை உயா் நீதிமன்றத்தை நாடி, நீதிமன்ற உத்தரவைப் பெற்று மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது பாபு முருகவேல் தரப்பில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வழக்கை சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று (ஆக. 7 )சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வரும் செப். 9 ஆம் தேதி நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை அன்றைய நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *