அவதூறு வழக்குகளில் ஹெச்.ராஜாவுக்கான சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்தது நீதிமன்றம்! | verdict against h raja was hold by high court

1341874.jpg
Spread the love

சென்னை: பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், கனிமொழி எம்பி குறித்தும் அவதூறாக பேசிய வழக்குகளில் பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தலா 6 மாதம் சிறை தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

பாஜக தமிழக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரான முன்னாள் எம்எல்ஏ ஹெச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது சமூக வலைதளப்பதிவில், “திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும்” என பதிவிட்டு இருந்தார். இதேபோல கடந்த 2018 ஏப்ரலில் திமுக எம்பி கனிமொழி குறித்தும் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு இருந்தார். அதையடுத்து ஹெச்.ராஜாவுக்கு எதிராக திமுக நிர்வாகிகளும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பிலும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டன. பெரியார் சிலை உடைப்பு குறித்து ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் போலீஸாரும், கனிமொழி்க்கு எதிரான புகார் குறித்து ஈரோடு நகர போலீஸாரும் ஹெச்.ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஹெச். ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்குகளை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நடந்தது.

அப்போது ஹெச். ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமமூர்த்தி, ஹெச்.ராஜாவுக்கு எதிராக பதியப்பட்ட இரு வழக்குகளிலும் அவர் அரசியல் ரீதியாகவே கருத்து தெரிவித்துள்ளதாகவும், மூன்றாவது நபர்கள் அளித்த புகார்களின் பேரில் அவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த வழக்குகளுக்கு போதிய ஆதாரங்களை புகார்தாரர்கள் தாக்கல் செய்யவில்லை என்றும் வாதிட்டார்.

பதிலுக்கு காவல் துறை தரப்பிலும், புகார்தாரர்கள் தரப்பிலும் “ஹெச்.ராஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளது. பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், திமுக எம்பியான கனிமொழி குறித்தும் அவர் தனது சமூக வலைதளத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் கருத்து தெரிவி்த்துள்ளார்” என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி. ஜெயவேல், “இந்த வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல் துறை தரப்பி்ல் சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால் இரு வழக்குகளிலும் அவரை குற்றவாளி என தீர்மானிக்கிறேன். எனவே இரு வழக்குகளிலும் அவருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன்” என தீர்ப்பளித்தார்.

இந்த சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், அதுவரை இந்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென ஹெச்.ராஜா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதி, அவருக்கு விதிக்கப்பட்ட தலா 6 மாதம் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

அபராதத்தை செலுத்திய ஹெச்,ராஜா, “இந்த வழக்குகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனக்கு எதிராக பதியப்பட்டவை. எனது கருத்தில் எந்த தவறும் இல்லை. இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். எனது கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *